சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மாணவர் தொடர் போராட்டம் எதிரொலி: மருத்துவ கல்லூரி மாணவர்களிடம் பாண்டியன் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவ கல்லூரி மாணவர்களிடம் பாண்டியன் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தினார்.

Update: 2021-01-25 06:16 GMT
சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்களிடம் பாண்டியன் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை
தொடர் போராட்டம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கி வரும் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்ற அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தை தங்களிடமும் பெற வலியுறுத்தி கடந்த 46 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தொடர் போராட்டம் காரணமாக கடந்த 20-ந்தேதி முதல் மருத்துவ கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்ததோடு, முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர, மற்ற மாணவ, மாணவிகள் விடுதியை விட்டு வெளியேறுமாறும் பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால் 
மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் விடுதிகளில் உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரம் நிறுத்தப்பட்டது.இருப்பினும் மாணவ-மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேச்சுவார்த்தை
இந்நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவ-மாணவிகளிடம் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன், அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன், பதிவாளர் (பொறுப்பு) ஞானதேவன், மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் மிஸ்ரா, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் நிர்மலா, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் பாரி, சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பாண்டியன் எம்.எல்.ஏ. மாணவர்களிடம் கூறுகையில், உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கி வந்த ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியை தற்போது சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தருகிறேன். அங்கு பேசி பிரச்சினைகு தீர்வு காணலாம். எனவே மாணவர்கள் அனைவரும் போராட்டத்தைக் கைவிடவேண்டும் என்றார்.

தீர்வு எட்டப்படவில்லை
அதற்கு மாணவர்களின் பிரதிநிதிகள் நாங்கள் சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க வருகிறோம். அங்கு தீர்வு எட்டினால் போராட்டத்தை கைவிடுகிறோம். அதுவரை சிதம்பரத்தில் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என கூறினர். எம்.எல்.ஏ.பாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு எட்டப்படாததால் மாணவர்கள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்