கலப்பு மருத்துவ முறையை கைவிடக்கோரி, நாடு முழுவதும் 50 இடங்களில் 1-ந் தேதி முதல் உண்ணாவிரதம்; அகில இந்திய மருத்துவர் சங்க தலைவர் ஜெயலால் பேட்டி

கலப்பு மருத்துவ முறையை மத்திய அரசு கைவிடக்கோரி நாடு முழுவதும் 50 இடங்களில் அடுத்தமாதம்(பிப்ரவரி) 1-ந் தேதி முதல் உண்ணாவிரத நடக்கிறது என அகில இந்திய மருத்துவர் சங்க தலைவர் ஜெயலால் கூறினார்.;

Update: 2021-01-25 05:37 GMT
தஞ்சையில் அகில இந்திய மருத்துவர் சங்க தலைவர் ஜெயலால் நிருபர்களுக்கு பேட்டி
பேட்டி
தஞ்சையில் அகில இந்திய மருத்துவர் சங்க தலைவர் ஜெயலால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு அனைத்து மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைத்து கலப்பு மருத்துவ முறையை கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அலோபதி, ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஓமியோபதி என ஒவ்வொரு துறையும் தனித்தனி சிறப்பு வாய்ந்தது. இவை அனைத்தும் தனித்தனி வகையில் பொதுமக்களுக்கு பயன் அளித்து வருகிறது.

50 இடங்களில் உண்ணாவிரதம்
ஆனால் இவற்றை ஒன்றோடு ஒன்று கலந்து சிகிச்சை அளித்தால் ஆபத்து ஏற்படும். பல்வேறு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும். எனவே கலப்பு மருத்துவ முறை திட்டத்தை மத்தியஅரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அடுத்தமாதம்(பிப்ரவரி) 1-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நாடு முழுவதும் 50 இடங்களில் உண்ணாவிரதம் நடைபெறும். தமிழகத்தில் இந்த போராட்டம் 4 இடங்களில் நடைபெறும். மருத்துவர்களுடன் இணைந்து பல் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு
போராட்டத்தின் ஒரு பகுதியாக சுப்ரீம்கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்து உள்ளோம். போராட்டத்துக்கு பிறகும் மத்தியஅரசு செவி சாய்க்காவிட்டால் கோரிக்கை நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும். எந்தவித பயிற்சியும் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் பல்வேறு நிலைகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மருத்துவத்துறையில் அறுவை சிகிச்சைக்கு தேவையான மயக்க மருந்து கொடுப்பது நவீன மருத்துவத்தில் மட்டுமே உள்ளது. ஆயுர்வேதத்தில் மயக்க மருந்து கொடுப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. எந்தவித வசதியும் இல்லாமல், முறையான பயிற்சியும் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்ய முன்வந்தால் பொதுமக்கள் தங்களை உட்படுத்தி கொள்ள தயாராக இருக்க மாட்டார்கள். அது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் தான் நாங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளோம்.

மருத்துவமனையை மூடவில்லை
இந்த போராட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்த வேண்டும் என்பது நோக்கமல்ல. நாங்கள் மருத்துவமனையை மூடவில்லை. எங்களது எதிர்ப்பை தெரிவிப்பதற்காக அகிம்சை வழியில் உண்ணாவிரதத்தை தேர்ந்தெடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது முன்னாள் தலைவர்கள் சிங்காரவேலு, இளங்கோவன், தஞ்சை கிளை தலைவர்கள் மாரிமுத்து, சசிராஜ், செயலாளர் நல்லதம்பி, பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்