தீ வைத்து காட்டுயானை கொல்லப்பட்ட சம்பவம்: முதுமலை வனத்துறையினரிடம், யானைகள் ஆராய்ச்சியாளர் விசாரணை
தீ வைத்து காட்டுயானை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக முதுமலை வனத்துறையினரிடம், யானைகள் ஆராய்ச்சியாளர் விசாரணை நடத்தினார்.;
காட்டுயானைக்கு தீ வைப்பு
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் கடந்த சில வாரங்களாக உடலில் காயங்களுடன் காட்டுயானை ஒன்று சுற்றித்திரிந்தது. அந்த யானைக்கு பழங்களில் மருந்து வைத்து கொடுத்து, வனத்துறையினர் சிகிச்சை அளித்தும், காயங்கள் குணமாகவில்லை. இதனால் கடந்த 19-ந் தேதி அந்த யானையை பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி மயக்க ஊசி செலுத்தி பிடித்து, லாரி மூலம் முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் செல்லும் வழியிலேயே யானை உயிரிழந்தது.
இதற்கிடையில் அந்த யானைக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது யானைக்கு சிலர் தீ வைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மாவனல்லா பகுதியை சேர்ந்த தனியார் விடுதி உரிமையாளர் மகன் ரேமண்ட் டீன்(வயது 28), பிரசாத்(36) ஆகிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் ரிக்கி ராயன்(31) என்பவரை தேடி வருகின்றனர்.
வனத்துறையினரிடம் விசாரணை
இந்த நிலையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையின் கீழ் செயல்படும் யானைகள் திட்ட ஆராய்ச்சியாளர் முத்தமிழ் செல்வன் நேற்று முதுமலைக்கு வந்தார். தொடர்ந்து மசினகுடி, பொக்காபுரம், மாவனல்லா உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினார். மேலும் தீ வைத்து கொல்லப்பட்ட யானை குறித்த தகவல்கள் தொடர்பாக வனத்துறையினரிடம் விசாரணை நடத்தினார். மேலும் யானை புதைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டார். அப்போது முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த், சிங்கார வனச்சரகர் காந்தன் மற்றும் வனத்துறையினர் உடனிருந்தனர். பின்னர் யானைகள்
திட்ட ஆராய்ச்சியாளர் முத்தமிழ்செல்வன் கூறும்போது, காட்டுயானைக்கு தீ வைத்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதற்காக முதுமலையில் 3 நாட்கள் முகாமிட்டு வன விலங்கு-மனித மோதல்கள் தடுப்பு குறித்து ஆலோசிக்கப்படும். தொடர்ந்து மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு அறிக்கை அளிக்கப்படும் என்றார்.