பா.ஜனதா வேட்பாளர்கள் வெற்றி பெற்று சட்டமன்றம் செல்வது உறுதி; மாநில பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் பேச்சு
வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கு செல்வது உறுதி என்று ராசிபுரம் அருகே நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் எல்.முருகன் பேசினார்.
வரவேற்பு நிகழ்ச்சி
நாமக்கல்லில் பா.ஜ.க. அணி பிரிவு மாநாடு நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் நாமக்கல் சென்றார். அப்போது அவருக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட்டில் அதிர்வேட்டுகள் முழங்க, மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட பா.ஜ.க. தலைவர் சத்தியமூர்த்தி வரவேற்றார். முன்னாள் எம்.பி.யும், பா.ஜ.க.வின் முக்கிய பிரமுகருமான டாக்டர் கே.பி. ராமலிங்கம் பேசினார். வரவேற்பு நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநிலத்தலைவர் முருகன் பேசியதாவது: மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் பல்வேறு தரப்பினர் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
பொது விடுமுறை
தமிழகத்தில் பா.ஜ.க. பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. எங்களது வேல் யாத்திரையை ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சியினர் குறை கூறினார்கள். கேலி, கிண்டல் செய்தார்கள். நாங்கள் கோவிலுக்கு செல்ல மாட்டோம் சாமி கும்பிட மாட்டோம் என்று ஸ்டாலின் சொன்னார். ஆனால் இன்றைக்கு அதே கிருத்திகை நாளில் ஸ்டாலின் கையில் வேல் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு மாத காலத்திற்குள் எவ்வளவு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்தப்பட்டு அதன் மூலம் தைப்பூச விழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பா.ஜ.க. சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தைப்பூச திருவிழாவை பொது விடுமுறை நாளாக அறிவித்தது வரவேற்க கூடியது. இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆதரவு
இந்து மத வழிபாட்டை தவறாக பேசியவர்களுக்கு வேல் யாத்திரை மூலம் உரிய பாடம் புகட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வக்கீல் காமராஜ், நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. பொதுச்செயலாளர் சேதுராமன், செயலாளர் ஹரிஹரன், மாநில செயற்குழு உறுப்பினர் புவனேஸ்வரி ஹரிகரன், நகர தலைவர் மணிகண்டன், செயலாளர் குமார், ராசிபுரம் நகர ஓ.பி.சி. அணித்தலைவர் சக்தி, மாவட்ட துணைத்தலைவர் சித்ரா, தவசி நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.