கல்லிடைக்குறிச்சியில் செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
கல்லிடைக்குறிச்சியில் செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
வாலிபர்
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள வைராவிகுளம் கீழத் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மகன் ஆனந்தராஜ் (வயது 27). சம்சா வியாபாரியான இவர் நெல்லை சுத்தமல்லியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை செல்போனில் ஷேர் சாட் மூலம் காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே ஆனந்தராஜ் 6-ம் வகுப்பு வரை தான் படித்து உள்ளார் என்பதை அறிந்த அந்த பெண், ஆனந்தராஜூடனான செல்போன் தொடர்பை துண்டித்து உள்ளார். இதனால் விரக்தி அடைந்த ஆனந்தராஜ், அந்த பெண்ணின் முகவரியை கண்டுபிடித்து பெற்றோரை சந்தித்துள்ளார். அப்போது அந்த பெண்ணை
காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து ெகாள்ள விரும்புவதாகும் கூறி பெண் கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் ஆனந்தராஜை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து எச்சரித்துள்ளனர். மேலும் அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுக்க கூடாது என எழுதி வாங்கி அனுப்பி உள்ளனர்.
தற்கொலை மிரட்டல்
இதனால் விரக்தியடைந்த ஆனந்தராஜ் கல்லிடைக்குறிச்சியில் உள்ள ஒரு செல்போன் கோபுரம் மீது ஏறி கையில் பெட்ரோல் கேனை வைத்துக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து பொதுமக்கள் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கும், அம்பை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி ஆனந்தராஜை கயிறு கட்டி பாதுகாப்பாக கீழே இறக்கி கல்லிடைக்குறிச்சி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக ஆனந்தராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் கல்லிடைக்குறிச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.