சாலையில் சுற்றித்திரிந்ததாக பிடிபட்ட மாடு செத்தது: நகராட்சி தொழுவத்தில் அமர்ந்து மாட்டின் உரிமையாளர்கள் தர்ணா - இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
சாலையில் சுற்றித்திரிந்த மாட்டை தனியார் அமைப்பினர் பிடித்து நகராட்சி தொழுவத்தில் அடைத்தனர். அங்கு மாடு இறந்ததால் அதன் உரிமையாளர்கள் இழப்பீடு வழங்கக்கோரி தர்ணா போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை நகரில் செயல்படும் பிராணிகள் நலவாரிய அமைப்பை சேர்ந்தவர்கள் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து சென்று அடைத்து வைத்து மாட்டின் உரிமையாளர்களிடம் அபராதம் வசூல் செய்து மாடுகளை விடுவிக்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சிவகங்கையை அடுத்த வாணியங்குடி பகுதியை சேர்ந்த காளையப்பன் என்பவருக்கு சொந்தமான பசுமாட்டை இந்த அமைப்பினர் சாலையில் சுற்றித்திரிந்ததாக கூறி பிடித்து வந்து தொழுவத்தில் அடைத்து வைத்தனர். இந்த நிலையில் அந்த அமைப்பின் பராமரிப்பில் இருந்த அந்த பசுமாடு திடீரென்று செத்தது.
இதைதொடர்ந்து ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் பிடிக்கப்பட்டு தொழுவத்தில் அடைக்கப்பட்டுள்ள மாடுகளின் உரிமையாளர்கள் அங்கு வந்தனர். அவர்கள் இறந்த மாட்டின் உரிமையாளருடன் சேர்ந்து அந்த தொழுவத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காளையப்பன் உள்ளிட்டவர்கள் கூறியதாவது:-
இந்த அமைப்பினர் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளனர் என்று தெரியவில்லை. எங்களிடம் மாடு ஒன்றிற்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை அபராதம் விதித்து வசூல் செய்துவருகின்றனர்.அந்த பணத்தை அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
காளையப்பனிடம் மாட்டிற்கு அபராதமாக ரூ.10ஆயிரம் கேட்டுள்ளனர். அந்த தொகையை கட்ட முடியாத சூழ்நிலையில் தொழுவத்திலேயே பசுமாட்டை விட்டு விட்டு சென்று விட்டார். இந்நிலையில் அந்த பசுமாடு தொழுவத்திற்குள்ளேயே மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது. இது குறித்து கேட்டபோது அந்த அமைப்பினர் சரியான பதிலளிக்கவில்லை. எனவே இந்த அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இறந்த மாட்டிற்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
சுமார் 2 மணி நேரமாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் நகராட்சி ஆணையாளர் அய்யப்பன் மற்றும் மண்டல துணை தாசில்தார் வந்து பேசி சமரசம் செய்து வைத்தனர்.