திருப்பூரில் தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி குழந்தையை கொஞ்சி பேசி மகிழ்ந்தார்.

திருப்பூரில் தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி குழந்தையை கொஞ்சி பேசி மகிழ்ந்தார்.

Update: 2021-01-24 22:47 GMT
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. திருப்பூரில் நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அதன்பின்னர் இரவு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறையினர் விருந்தினர் மாளிகையில் தங்கினார். அதன் பிறகு நேற்று காலை கட்சி நிர்வாகிகளை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். காலை 10.30 மணி அளவில் அங்கிருந்து ஊத்துக்குளிக்கு பிரசாரத்திற்கு புறப்பட்டார்.

திருப்பூர் மாநகருக்குள் ராகுல்காந்தி வரும் பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ரோட்டோரம் நின்றிருந்த மக்களை பார்த்து உற்சாகத்துடன் காரில் இருந்தபடி கையசைத்து சென்றார். ஊத்துக்குளி ரோடு 2-வது ரெயில்வேகேட் அருகே நின்றிருந்த 10 வயது சிறுமியை பார்த்ததும் காரை நிறுத்திய ராகுல் காந்தி அந்த சிறுமியை அருகில் வரவழைத்து அவருடைய பெயர் மற்றும் படிப்பு விவரத்தை கேட்டு உற்சாகப்படுத்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

ஆரத்தி எடுத்த பெண்

பின்னர் கருமாரம்பாளையத்தில் நின்றிருந்த மக்களை பார்த்ததும் காரை நிறுத்தினார். அப்போது ஒரு பெண் ராகுல் காந்திக்கு ஆரத்தி எடுக்க வந்தார். காரிலிருந்து இறங்கிய ராகுல் காந்திக்கு அந்த பெண் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு வரவேற்றார். ராகுல் காந்தி அதை ஏற்றுக்கொண்டார். அங்கிருந்தவர்களுக்கு கைகுலுக்கியதோடு ஒரு குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
அதன்பின்னர் பாரப்பாளையம் பகுதியில் நின்றிருந்தவர்களிடம் கைகுலுக்கினார். பின்னர் கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் திரண்டிருந்த மக்களை பார்த்ததும் காரிலிருந்து இறங்கிய ராகுல் காந்தி மக்களிடம் சென்று கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தொண்டரிடம் பேசிய ராகுல் காந்தி

இதுபோல் ஊத்துக்குளியில் ராகுல் காந்தி பேசுவதற்கு முன்பு காரிலிருந்து இறங்கி தொண்டர்கள் பக்கம் சென்று அவர்களிடமிருந்து சால்வையை பெற்றுக்கொண்டார். அவர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். தொண்டர் ஒருவர் ராகுல் காந்தியிடம் பேச முயன்றார். அவர் கூறுவதை ராகுல்காந்தி அருகில் சென்று என்ன கூற விரும்புகிறீர் என்று கேட்டார். அப்போது அந்தத் தொண்டர் ‘மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தவிர்த்து வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். அடுத்த பிரதமர் நீங்கள்தான்' என்றார். அதை ராகுல்காந்தி தலையை அசைத்தபடி கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்