நெய்வேலியில் மருத்துவக்கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
நெய்வேலியில் மருத்துவக்கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி 5-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவர் பாலமுருகன். இவரது மனைவி சுந்தரி. இவர் விருத்தாசலம் அடுத்த பரவளூரில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் ரம்யாகவுரி(வயது 19) ரஷ்யா நாட்டில் உள்ள ஒரு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா பரவல் காரணமாக மருத்துவக்கல்லூரி மூடப்பட்டதால் ரம்யாகவுரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துவிட்டார்.
நேற்று காலை வீட்டில் இருந்த ரம்யாகவுரியின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்தது. இதைகேட்ட அவரது தாயார் சுந்தரி, மகளிடம் உன்னிடம் செல்போனில் பேசியது யார்? என கேட்டுள்ளார். அதற்கு ரம்யாகவுரி பதில் ஏதும் கூறாமல் அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக தாழிட்டு கொண்டார்.
தற்கொலை
இதனால் பதறிய சுந்தரி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அறையின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பார்த்தபோது, ரம்யா கவுரி துப்பட்டாவால் தூக்குப்போட்டபடி மயங்கிய நிலையில் தொங்கினார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சுந்தரி அவரை மீட்டு நெய்வேலியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரம்யா கவுரி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரம்யாகவுரி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.