வேளாண் சட்டத்துக்கு எதிராக இன்று போராட்டம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மும்பையில் குவிந்தனர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
வேளாண் சட்டத்துக்கு எதிராக இன்று மும்பையில் விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் மும்பையில் குவிந்துள்ளனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.;
மும்பை,
மத்திய அரசு புதிதாக 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்களால் வேளாண் சந்தைகள் படிப்படியாக மூடப்படும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள். ஆனால் அரசு இதை மறுக்கிறது. அதே போல் இந்த புதிய சட்டங்களால் விவசாய விளைபொருட்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் ஆதரவு விலை நடைமுறை முடிவுக்கு வரும் என்றும் விவசாயிகள் அச்சம் கொண்டுள்ளனர். ஆனால் இதையும் மறுத்துள்ள மத்திய அரசு, எக்காரணம் கொண்டும் குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறை நிறுத்தப்படாது என்று கூறியுள்ளது.
ஆனாலும் மத்திய அரசு தனது 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஒரு மாதத்திற்கும் மேலாக பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லியின் புறநகர் பகுதியில் பகல்-இரவாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், உடல் நடுங்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் உயிரையும் விட்டுள்ளனர். சிலர் தற்கொலை செய்து கொண்டனர். விவசாயிகளின் இந்த போராட்டம் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
இந்தநிலையில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, விவசாய சங்கங்கள் சார்பில் மராட்டிய தலைநகர் மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) பிரமாண்ட போராட்டம் நடைபெற உள்ளது.
பின்னர் போராட்டக்காரர்கள் ஆசாத் மைதானத்தில் இருந்து பேரணியாக கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளனர்.
இந்த போராட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் மாநில தலைவர் பாலசாகேப் தோரட், சிவசேனா சார்பில் மந்திரி ஆதித்ய தாக்கரே ஆகியோர் கலந்து கொள்கின்றனா்.
இதற்கிடையே மும்பையில் நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்து கொள்ள 15 ஆயிரம் விவசாயிகள் கடந்த சனிக்கிழமை நாசிக்கில் இருந்து புறப்பட்டதாக இந்திய கிசான் சபா தெரிவித்து இருந்தது. விவசாயிகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் சாலைகளில் அணிவகுத்தப்படி வந்தனர். இதில் பல விவசாயிகள் மும்பை எல்லையை அடைந்தவுடன் நடந்தே பேரணியாக வர தொடங்கினர். அவர்கள் பொது மக்களிடம் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டனர்.
இந்தநிலையில் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான விவசாயிகள் நேற்று இரவு மும்பை ஆசாத் மைதானம் வந்தடைந்து உள்ளனர். இதேபோல விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும் அங்கு திரண்டு உள்ளனர்.
இந்தநிலையில் அதிகளவில் விவசாயிகள் திரண்டு உள்ளதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 100 அதிகாரிகள் உள்பட 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். போலீசார் குட்டி விமானங்கள் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.