தூத்துக்குடி அருகே மாட்டு வண்டி பந்தயத்தை அமைச்சா் கடம்பூா் ராஜூ தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி அருகே மாட்டு வண்டி பந்தயத்தை அமைச்சா் கடம்பூா் ராஜூ தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி:
வீரபாண்டிய கட்டப்பொம்மனின் 262-வது பிறந்த நாள் மற்றும் திருமலை நாயக்கரின் 438-வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி அருகே உள்ள மேலத்தட்டப்பாறை கிராமத்தில் வீரபாண்டிய கட்டப்பொம்மன் இளைஞரணி மற்றும் திருமலை நாயக்கர் இளைஞர் பேரவை சார்பில் மாட்டுவண்டி எல்லை பந்தயம் நேற்று காலை நடந்தது. போட்டி நடுத்தர மாட்டுவண்டி மற்றும் சிறிய மாட்டுவண்டி என இரு பிரிவுகளாக நடந்தது.
நடுத்தர மாட்டு வண்டி போட்டிக்கு 8 மைல் தொலைவும், சிறிய மாட்டுவண்டி போட்டிக்கு 6 மைல் தொலைவும் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இதில் தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. இந்த போட்டிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நடுத்தர மாட்டுவண்டி போட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் மாட்டுவண்டி முதல் பரிசை வென்றது. 2-ம் பரிசை நெல்லை மாவட்டம் வேலங்குளத்தை சேர்ந்த எம்.கண்ணன் மாட்டுவண்டியும், மூன்றாம் பரிசை குமரெட்டியாபுரம் மகாவிஷ்ணு மாட்டுவண்டியும் வென்றன.
சிறிய மாட்டுவண்டி போட்டியிலும் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் வண்டியே முதல் பரிசை வென்றது. 2-ம் பரிசை வேலங்குளம் கண்ணன் மற்றும் மீனாட்சிபுரம் கவுசிக் கார்த்திக் ஆகியோரது காளைகள் பூட்டப்பட்ட வண்டியும், 3-ம் பரிசை கச்சேரி தளவாய்புரத்தை சேர்ந்த தங்கராஜ் மாட்டுவண்டியும் பெற்றன. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், தூத்துக்குடி புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.பொன்னரசு, வீர விளையாட்டுக் கழக மாவட்ட செயலாளர் பி.விஜயகுமார், வீரசக்கதேவி ஆலயக்குழு இணைச் செயலாளர் சண்முக மல்லுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கழுகுமலை அருகே லட்சுமிபுரம், கே.ராமநாதபுரம், வள்ளிநாயகபுரம் ஆகிய கிராமங்களில் தமிழக அரசின் அம்மா நகரும் ரேஷன் கடைகள் தொடங்கப்பட்டது. அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அம்மா நகரும் ரேஷன் கடைகளை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார்.
கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.