ஓசூர் அருகே, கர்நாடக எல்லையில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தைப்புலி பதுங்கல்; கிராம மக்கள் பீதி
ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தைப்புலி பதுங்கி இருப்பதால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
ஓசூர்:
கர்நாடக மாநிலம் ஆனேக்கல் அருகே பன்னார்கட்டா வனப்பகுதி உள்ளது. இங்குள்ள பூங்காவில் யானைகள், சிறுத்தைப்புலி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வளர்க்கப்பட்டு வருகன்றன. மேலும் வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இதில் யானைகள், சிறுத்தைப்புலிகள் அடிக்கடி ஊருக்குள் வருகின்றன.
குறிப்பாக ஆனேக்கல், பேகூர், அத்திப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்று வட்டார பகுதிகளுக்கு யானைகள், சிறுத்தைப்புலிகள் அடிக்கடி வருகின்றன. இந்த நிலையில் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தைப்புலி ஒன்று ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி பக்கமுள்ள பேகூர் பகுதியில் சாலையை நேற்று முன்தினம் அதிகாலையில் கடந்துள்ளது.
கிராம மக்கள் பீதி
அந்த பகுதியில் பிரஸ்டீஜ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சிறுத்தைப்புலி பதுங்கி உள்ளது. இது அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பன்னார்கட்டா வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்துள்ளனர். அவர்கள் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்கள் உஷாராக இருக்குமாறும், இரவு நேரத்தில் வெளியே வர வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தினர். மேலும் அருகில் உள்ள ஓசூரை ஒட்டிய கிராம மக்களுக்கும் சிறுத்தைப்புலியின் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். குடியிருப்பு பகுதியில் சிறுத்தைப்புலி பதுங்கி இருப்பதால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.