திருச்செந்தூா் கோவில் கடலில் பக்தா் தவற விட்ட 5 பவுன் தங்க சங்கிலி பாதுகாப்பு குழுவினா் மீட்டு ஒப்படைத்தனா்
திருச்செந்தூா் கோவில் கடலில் பக்தா் தவற விட்ட 5 பவுன் தங்கச் சங்கிலியை பாதுகாப்பு குழுவினா் மீட்டு ஒப்படைத்தனா்.
திருச்செந்தூர்:
மதுரை வரதா ஆண்டாள்புரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). இவர் குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு நேற்று காலை வந்தார். கடலில் குளித்த போது கண்ணனின் 5 பவுன் தங்கச்சங்கிலி கடலில் தவறி விழுந்துவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணன் அங்கிருந்த தற்காலிக கடல் பாதுகாப்பு குழுவினரிடம் நகையை தவறவிட்டதை தெரிவித்தார். உடனடியாக கடலில் பாதுகாப்பு பணியில் ஈடு்பட்ட ஜாண், மணி, பிரபு ஆகியோர் தலைமையிலான 20 பேர் கடலில் நீரில் மூழ்கி தேடினர்.
அப்போது சுமார் 2 மணி நேர தேடுதலுக்கு பிறகு 5 பவுன் தங்க சங்கிலியை கண்டெடுத்தனர். அதனை உடனடியாக கண்ணனிடம் நேரில் அதே இடத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து கண்ணன் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். நகையை மீட்டு ஒப்படைத்த கடல் பாதுகாப்பு குழுவினருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.