ஓரினச்சேர்க்கையால் ஏற்பட்ட தகராறில் வடமாநில தொழிலாளியை கல்லால் அடித்துக்கொன்ற வாலிபர் கைது

ஓரினச்சேர்க்கையால் ஏற்பட்ட தகராறில் வடமாநில தொழிலாளியை கல்லால் அடித்துக்கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-01-24 17:46 GMT
வீரபாண்டி:-

ஓரினச்சேர்க்கையால் ஏற்பட்ட தகராறில் வடமாநில தொழிலாளியை கல்லால் அடித்துக்கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் வீரபாண்டி பகுதிக்கு உட்பட்ட நொச்சிபாளையம் பிரிவில் கடந்த 17-ந்தேதி அழுகிய நிலையில் ஒரு ஆண் பிணமாக கிடப்பதாக வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரபாண்டி போலீசார், பிணமாக கிடந்தவரின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.   

உடலில் காயங்களுடன் அழுகிய நிலையில் இருந்த ஆண் யார்? என்ற விவரம் உடனடியாக  தெரியவில்லை. மேலும் பிணமாக கிடந்தவர் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டாரா?  என்ற கோணத்தில் வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பிணமாக கிடந்தவர் பீகார் மாநிலத்தைச்சேர்ந்த ரவீந்திரதாஸ் (வயது 49) என்பதும், இவர் திருப்பூர் வீரபாண்டி பிரிவில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. 

மேலும் ரவீந்திரதாஸ் செல்போனை போலீசார் ஆய்வு செய்த போது கடைசியாக கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த சுபாஷ் (20) என்பவர் பேசியது தெரியவந்தது. இதனையடுத்து வீரபாண்டி பிரிவில் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சுபாசை போலீசார் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

போலீசார் நடத்திய விசாரணையில், சுபாஷ் கடந்த ஒரு வருடமாக ரவீந்திரதாசுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி திருப்பூர்-பல்லடம் சாலை நொச்சிபாளையம் பிரிவில் ஒரு ஓட்டல் பின்புறமாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டனர். 

 அப்போது ரவீந்திரதாசுக்கும், சுபாசுக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த சுபாஷ், ரவீந்திரதாசை கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து வீரபாண்டி போலீசார் சுபாஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்