திண்டிவனம் அருகே டயா் வெடித்து காா் கவிழ்ந்து பல்கலைக்கழக ஊழியா் சாவு

திண்டிவனம் அருகே டயர் வெடித்து கார் கவிழ்ந்தது. இதில் பல்கலைக்கழக ஊழியர் உயிரிழந்தார்.

Update: 2021-01-24 17:40 GMT
திண்டிவனம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் செந்தில்குமார் (வயது 48).  விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் லேப் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். குடும்பத்தினருடன்  விழுப்புரம் மகாராஜபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வருகிறார். நேற்று காலை வீட்டில் இருந்து செங்கல்பட்டில் உள்ள தனது நண்பரின் வீட்டுக்கு காரில்,சென்று கொண்டிருந்தார். அப்போது, திண்டிவனம் அடுத்த மேல்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, திடீரென அவர் ஓட்டிச்சென்ற காரின் டயர் வெடித்தது. கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவர் மீது மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில் படுகாயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தவகலறிந்த ரோஷணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்தவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து ரோஷணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். செந்தில்குமாருக்கு, லட்சுமி (36) என்ற மனைவியும், கோகுலகிருஷ்ணன் (13) தமிழ்செல்வன் (9) என 2 மகன்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்