வேலூரில் 88 வாகனங்களில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் - வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை

வேலூரில் 88 வாகனங்களில் காற்று ஒலிப்பான்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-01-24 17:20 GMT
வேலூர்,

32-வது சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி நேற்று வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களில் தடையை மீறி பொருத்தப்பட்டுள்ள காற்று ஒலிப்பான்கள் (ஏர் ஹாரன்) அகற்றும் நிகழ்ச்சி நடந்தது. வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், கருணாநிதி மற்றும் ஊழியர்கள் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு, தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை அகற்றினர்.

மேலும் அண்ணா சாலை வழியாக சென்ற லாரி, மினி லாரிகளில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களும் அகற்றப்பட்டன. பஸ், லாரி, மினி லாரி உள்பட 88 வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டது. முன்னதாக பள்ளிக்கொண்டா சுங்க சோதனைச்சாவடி அருகே நடத்திய வாகன சோதனையில் தமிழக நுழைவு வரி செலுத்தாத 2 கர்நாடக லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்