புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போலீஸ் மோப்ப நாய் சன்னி திடீர் சாவு
வேலூரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த போலீஸ் மோப்பநாய் சன்னி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
வேலூர்,
வேலூர் மாவட்ட போலீஸ் மோப்பநாய் பிரிவில் சிம்பா, சன்னி, லூசி, அக்னி என்ற 4 மோப்ப நாய்கள் இருந்தன. இதில் சன்னி, சிம்பா ஆகிய நாய்கள் கொலை மற்றும் கொள்ளை சம்பந்தப்பட்ட குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், லூசி, அக்னி ஆகியவை வெடிகுண்டை கண்டுபிடிக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்தன.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மோப்பநாய் சன்னிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அதனை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது சன்னிக்கு வாயில் புற்றுநோய் இருந்தது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து சென்னையில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். பின்னர் வேலூர் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சன்னிக்கு சரியாக சாப்பிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் போலீசார் அதற்கு பால் மற்றும் பிஸ்கெட் போன்றவற்றை ஊட்டி வந்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சன்னி நேற்று காலை திடீரென உயிரிழந்தது. இதனையடுத்து வேலூர் வசந்தபுரத்தில் உள்ள போலீஸ் மோப்பநாய் பிரிவு அலுவலக வளாகத்தில் சன்னி உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், சன்னி கடந்த 2016-ம் ஆண்டு மோப்பநாய் பிரிவுக்கு குட்டியாக கொண்டு வரப்பட்டது. இதற்கு சன்னி என்று அப்போதைய வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பெயரிட்டார். பல்வேறு வழக்குகளில் துப்பு துலக்குவதற்கு இந்த சன்னி பெரும் உதவியாக இருந்தது.
கடந்த ஆண்டு உமராபாத்தில் நடந்த கொலை வழக்கு மற்றும் விருதம்பட்டு வீட்டில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க துப்பு துலக்கியதில் சன்னியின் பங்கு முக்கியமானதாக அமைந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வாயில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்து விட்டது. இதற்கு பதிலாக புதிதாக மோப்பநாய் ஒன்று விரைவில் சேர்க்கப்படும் என்றனர்.