வாணியம்பாடி அருகே, கொடுத்த கடனை நண்பர்கள் திருப்பி தராததால் விவசாயி தற்கொலை - எல்லை பிரச்சினையால் தமிழக போலீசார் தயக்கம்
வாணியம்பாடி அருகே கொடுத்த கடனை நண்பர்கள் திருப்பி தராததால் மனமுடைந்த விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். எல்லைப் பிரச்சினையால் தமிழக போலீசார் தயக்கம் காட்டினர்.
வாணியம்பாடி,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த தமிழக-ஆந்திர எல்லை பகுதியான புல்லூர் மேல்பள்ளத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 35), விவசாயி. இவரிடம், 2016-ம் ஆண்டு புத்துக்கோவில் பகுதியைச் சேர்ந்த நண்பர்களான சந்தோஷ், மோகன், சரவணன் ஆகியோர் சேர்ந்து வேலைக்காக வெளிநாடு செல்ல கடனாக பணம் கேட்டனர்.
அதற்கு அவர், எனது தந்தை மின்வாரியத்தில் ஊழியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றபோது கிடைத்த பணம், வேறு இடத்தில் கடன் வாங்கிய பணம் என மொத்தம் ரூ.7 லட்சத்தை நண்பர்களிடம் கொடுத்துள்ளார். 5 ஆண்டுகளாகியும் பணத்தைக் கொடுக்கவில்லை, காலம் கடத்தி வந்தனர். கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டபோது நண்பர்கள் அவரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ராம்குமார், மரண கடிதத்தை எழுதி வைத்து விட்டு, அறையின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திம்மாம்பேட்டை போலீசார், எல்லைப் பிரச்சினையால் குறிப்பிட்ட தூரம் சென்று தயக்கத்துடன் திரும்பி வந்து விட்டனர். 12 மணி நேரத்துக்கு பிறகு ஆந்திர மாநிலம் குப்பம் போலீசார் வந்து அவரின் பிணத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர்.
இதையடுத்து தமிழக எல்லைப் பகுதி எனக் கூறி தமிழக போலீசார் குப்பம் சென்று, பிணத்தை அங்கிருந்து கொண்டு வந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தனர். திம்மாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.