நாமக்கல்லில், அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணி 70 சதவீதம் நிறைவு - அமைச்சர் தங்கமணி ஆய்வு
நாமக்கல்லில் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், அமைச்சர் தங்கமணி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவ கல்லூரிக்கு 5 கட்டிடங்களும், மருத்துவமனைக்கு 9 கட்டிடங்களும், இருப்பிடத்திற்கு 8 கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகின்றன.
மருத்துவ கல்லூரி கட்டிடமானது தரை தளம் மற்றும் 5 மாடிகளுடனும், மருத்துவமனை கட்டிடங்கள் வாகனம் நிறுத்தும் தளம், தரைதளம் மற்றும் 6 மாடிகளுடனும், விடுதி கட்டிடங்கள் வாகனம் நிறுத்தும் தளம், தரைதளம் மற்றும் 5 மாடிகளுடனும்கட்டப்பட்டு வருகின்றன.
இந்த கட்டுமான பணிகளை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கட்டும் பணிகளில் 70 சதவீதம் பணிகள் முடிவடைந்து இருப்பதாகவும், மருத்துவமனை கட்டும் பணிகளில் 60 சதவீதம் பணிகள் முடிவடைந்து இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது கலெக்டர் மெகராஜ், கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.