சாலையில் செல்பவர்களை கடிக்க முயன்ற தெரு நாயை அடித்துக்கொன்ற 2 பேர் கைது - வைரலான வீடியோவால் சிக்கினர்

மதுரையில் சாலையில் செல்பவர்களை கடிக்க முயன்ற தெரு நாயை அடித்து கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். வைரலான வீடியோவால் சிக்கினர்.

Update: 2021-01-24 15:11 GMT
மதுரை,

மதுரை செல்லூர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் முத்துசரவணன். இவர் அந்த பகுதியில் சென்று வரும் போது தெருநாய் ஒன்று அவரை பார்த்து குரைத்து கொண்டே கடிக்க முயன்று உள்ளது.

இவரை போன்றே அந்த வழியாக செல்பவர்கள் அனைவரையும் அந்த தெருநாய் கடிக்க முயன்றுள்ளது. அடிக்கடி நடந்த இந்த சம்பவத்தால் முத்துசரவணன் ஆத்திரம் அடைந்து அந்த நாயை கொலை செய்ய திட்டமிட்டார்.

அதற்காக செல்லூர் கணேசபுரத்தை சேர்ந்த விமல்ராஜ் (வயது 37) என்பவரிடம் 500 ரூபாய் கொடுத்து நாயை கொலை செய்து விடுமாறு தெரிவித்தார். அவரும் மது போதையில் அந்த தெரு நாயை மரக்கட்டையால் அடித்து கொலை செய்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து அந்த பகுதி கிராம நிர்வாக அதிகாரி செல்லூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விலங்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்து விமல்ராஜ், முத்துசரவணனை கைது செய்தனர்.

மதுரையில் நகர் முழுவதும் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஒரு சில பகுதியில் உள்ள தெருநாய்கள் அந்த பகுதி வழியாக செல்லும் நபர்களை கொடூரமாக கடித்த சம்பவமும் தினமும் அரங்கேறி வருகிறது. மேலும் தெருநாய்களால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்தி ரியில் தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஊசி போட்டு வருகிறார்கள். இதையொல்லாம் சமூக ஆர்வலர்கள் மற்றும் விலங்குகள் அமைப்புகள் கண்டு கொள்வதில்லை. இதே போன்ற சம்பவம் அவரவருக்கு நடந்தால் தான் தெரியும் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்