மாவட்டத்தில் பயிர்கள் பாதிப்பு கணக்கெடுப்பு பணி - வேளாண்மை துறை இயக்குனர் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு பணிகளை மாநில வேளாண்மை துறை இயக்குனர், கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் கணக்கெடுப்பு பணிகளை மாநில வேளாண்மைத்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். குறிப்பாக, ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கற்காத்தகுடி, கருங்குடி ஆகிய கிராமங்களுக்கும், நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காரடர்ந்தகுடி, அ.காச்சான் ஆகிய கிராமங்களுக்கும் நேரடியாக சென்று பயிர் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தனர். அதன்பின்பு வேளாண்மைத்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது:-
தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தின் ஜனவரி மாத சராசரி மழையளவு 48 மி.மீ. ஆகும். இந்த ஆண்டில் இதுவரை 247 மி.மீ. மழையளவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ள கணக்கெடுப்பு பணிகளின்படி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களும், 11,400 ஏக்கர் சிறுதானிய பயிர்களும், 7,500 ஏக்கர் பயிறு வகைகளும், 2,700 ஏக்கர் எண்ணெய் வித்து பயிர்களும் சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் உரிய நிவாரணம் வழங்க ஏதுவாக ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக கிராமங்களில் வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பயிர் பாதுகாப்பு குறித்த கணக்கெடுக்கும் கள ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை வரும் 29-ந் தேதிக்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பயிர் பாதிப்பு குறித்த விரிவான அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாநில வேளாண்மை துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி தலைமையில், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில், பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் ராமநாதபுரம் சப்-கலெக்டர் சுகபுத்ரா, வேளாண்மைத் துறை இணை இயக்குனர் குணபாலன், துணை இயக்குனர் சேக்அப்துல்லா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.