சாயல்குடி அருகே, மினி வேன் கவிழ்ந்து 30 பேர் படுகாயம்
சாயல்குடி அருகே மினி வேன் கவிழ்ந்து 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
சாயல்குடி,
சாயல்குடி வடக்குத்தெரு பகுதியை சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளிகள் மினிவேன் மூலம் விவசாய பணிக்காக பெருநாழி அருகே உள்ள சின்னூர் கிராமத்திற்கு சென்றனர். பின்னர் அங்கு பணிகளை முடித்து விட்டு வேனில் திரும்பி கொண்டிருந்தனர். சாயல்குடி அருகே உள்ள புல்லந்தை கிராமம் அருகே இந்த வேன் வந்து கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் 30 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாயல்குடி போலீசார், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.