மழையால் பாதிக்கப்பட்ட 52 ஆயிரம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை - வேளாண் இயக்குனர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 52 ஆயிரம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-01-24 13:25 GMT
இளையான்குடி,

சிவகங்கை மாவட்டத்தில் சமீபத்தில் பருவம் தவறி பெய்த மழையால் விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமாகி விட்டன. பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். இதை தொடர்ந்து வேளாண் அதிகாரிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் இளையான்குடி அருகே உள்ள கச்சாத்தாநல்லூரில் சென்னை வேளாண்மை இயக்குனர் தெட்சணாமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் விைளந்து அறுவடை செய்ய முடியாமல் போன நெற்கதிர்களை கண்ணீருடன் காண்பித்து நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்தனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். கச்சாத்தாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் அதிகாரிகள் குழுவினரிடம், பருவம் தவறிய மழையால் நெல்விவசாயத்தின் பாதிப்பின் விவரங்களை எடுத்து கூறினார்.

இது குறித்து சென்னை வேளாண் இயக்குனர் தெட்சணாமூர்த்தி கூறும் போது, சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 636 ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருவம் தவறி வடகிழக்கு பருவமழை பெய்ததால் மாவட்டத்தில் 98 ஆயிரத்து 906 ஏக்கர் நெற்பயிர் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 52 ஆயிரத்து 516 விவசாயிகள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது பயிர் சாகுபடி விவரங்கள் பெற்று தகுந்த நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பின்னர் இளையான்குடி வட்டாரத்தில் கச்சாத்தாநல்லூர், மானாமதுரை வட்டாரத்தில் புளியங்குளம் கிராமத்தில் சென்னை வேளாண்மை இயக்குனர் தெட்சணாமூர்த்தி பாதிக்கப்பட்ட நிலங்களையும், விவசாயிகளையும் நேரடியாக ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, சென்னை துணை இயக்குனர் சுந்தரம்பிள்ளை, சிவகங்கை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன், வேளாண்மை துணை இயக்குனர்கள் பன்னீர்செல்வம், ரவிச்சந்திரன், கதிரேசன், தனபாலன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்