தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி, இழப்பீட்டை தனித்தனியாக வழங்க வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை
சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தையும், இழப்பீட்டையும் தனித்தனியாக கணக்கிட்டு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடப்பட்டது.
சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையி்ல் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன், கூட்டுறவு இணை பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் முருகேசன், வேளாண்மை துறை துணை இயக்குனர்கள் அழகுமலை, பன்னீர் செல்வம் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதாவது:-
தற்போது பெய்த தொடர்மழையால் நெல், மிளகாய், வெங்காயம், வாழை பயிர் பாதிக்கப்பட்டுள்ளன. நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். நிவாரணத்தையும், இழப்பீட்டையும் ஒன்றாக கணக்கிடாமல் தனித்தனியாக கணக்கிட்டு வழங்க வேண்டும். பேரிடர் நிவாரணத்தொகையில் இருந்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். காளையார்கோவில் அருகே மந்திக்கண்மாய் பகுதியில் கடலை பயிர் அழுகி விட்டது. அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு இழப்பீடு வழங்க வேண்டும். மேலப்பூங்குடி பகுதியில் பெரியாறு கால்வாயில் பல ஆண்டுகளாக சரிவர நீர் கிடைப்பதில்லை என்று தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளி்த்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி பேசியதாவது:-
மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் நெல் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பங்கு மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். ஒரு ஏக்கருக்கு நெல் பயிருக்கு நிவாரணத்தொகை ரூ.8 ஆயிரம் வழங்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் இத்தொகையை அதிகப்படுத்த கூறிய கருத்துகள் அரசுக்கு தெரியப்படுத்தப்படும். பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.