ஜெயங்கொண்டத்தில் பல்லாங்குழியான சாலைகள்; விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஜெயங்கொண்டத்தில் பல்லாங்குழியான சாலைகளால் விபத்தில் சிக்குகின்றனர். எனவே அந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-01-24 03:09 GMT
அரசு மருத்துவமனை எதிரே உள்ள காளியம்மன் கோவில் அருகே உள்ள பள்ளத்தையும் படத்தில் காணலாம்
பல்லாங்குழியான சாலைகள்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

மக்கள் தொகைக்கு ஏற்ப இங்கு வாகனங்களில் எண்ணிக்கையும் இந்த நகராட்சியில் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களில் எண்ணிக்கையும் அதிகம்.ஆனால் ஜெயங்கொண்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் வாகனங்கள் செல்வதற்கு பயன்பாடு இன்றி உள்ளது.

குறிப்பாக ஜெயங்கொண்டம் - தா.பழூர் ரோடு, விருத்தாச்சலம் ரோடு, சிதம்பரம் ரோடு, திருச்சி உள்ளிட்ட ரோடுகளில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு பல்லாங்குழிகளாக காட்சி அளிக்கிறது.வாகனங்களில் வருபவர்கள் அதில் விழுந்து அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.

சீரமைக்க கோரிக்கை
அதுமட்டுமின்றி காந்தி பூங்கா அருகே விருத்தாசலம் சாலையில் சுமார் ஒரு அடி ஆழத்தில் பள்ளம் உள்ளது. ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை எதிரிலுள்ள திருப்பத்திலும், மேலும் பல இடங்களிலும் இது போன்ற பள்ளங்கள் காணப்படுகிறது.

இதில் வாகனங்கள் விழுந்து பழுதாகி நிற்கும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் மோசமான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்