கரூர் அருகே பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது மினி கன்டெய்னர் லாரி மோதி ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்
கரூர் அருகே பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது மினி கன்டெய்னர் லாரி மோதி ஒருவர் பரிதாபமாக இறந்தார். இதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.;
மினி கன்டெய்னர் லாரி மோதல்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் கரூர் வழியாக பழனிக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தனர். இவர்களுடன் இவர்களுக்கு தேவையான தண்ணீர், சமையல் பாத்திரங்கள் மற்றும் உணவு பொருட்கள் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு மினி வேன் ஒன்றும் சென்று கொண்டிருந்தது.
இந்தநிலையில் நேற்று காலை இந்த குழுவினர் கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காக்காவாடி பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே வேனை நிறுத்தி அதிலிருந்து பிஸ்கட்டு்களை, மோகனூர் முத்துராஜா தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 28) என்பவர் பக்தர்களுக்கு வழங்கி கொண்டிருந்தார். அப்போது அதே திசையில் திண்டுக்கல் நோக்கி வந்த மினி கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக கார்த்திகேயன் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
3 பேர் படுகாயம்
இதுகுறித்து தகவலறிந்த வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் இறந்த கார்த்திகேயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மகேஷ் (37), கீதா (40), விஜயலட்சுமி (58) ஆகியோர் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.