திருச்சி அருகே மாடு மேய்க்க சென்ற விவசாயி ரெயில் மோதி பலி
திருச்சி அருகே மாடு மேய்க்க சென்ற விவசாயி ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
மாடு மேய்க்க சென்ற விவசாயி
திருச்சி அருகே உள்ள பெரிய கொத்த மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 65). விவசாயியான இவர், மாடுகள் வளர்த்து, பால் வியாபாரம் செய்து வந்தார். வீட்டில் இருந்து தினமும் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அவர், வழக்கம்போல மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். மாலையில் மாடுகள் அனைத்தும் தானாகவே வீட்டிற்கு திரும்பி வந்தன. ஆனால் தேவராஜ் மட்டும் வரவில்லை.
ரெயிலில் அடிபட்டு பலி
நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வராததால், உறவினர்கள் இரவு முழுவதும் அவரை தேடினர். இந்த நிலையில் பெரிய கொத்தமங்கலம் அருகே தண்டவாளப் பகுதியில் நேற்று முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக திருச்சி ரெயில்வே நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு இறந்து கிடந்தது விவசாயி தேவராஜ் என்பதும், அவர் மாடுகளை மேய்க்க சென்ற போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக சென்ற ரெயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது. அவரின் உடலை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.