சட்டவிரோதமாக கல்குவாரி நடத்தி வருபவர்கள் உரிய முறையில் விண்ணப்பித்து அரசிடம் அனுமதி பெறலாம் முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்
சட்டவிரோதமாக கல்குவாரி நடத்தி வருபவர்கள் உரிய முறையில் விண்ணப்பித்து அரசிடம் அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
மைசூரு,
முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று மைசூருவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பெங்களூருவில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் மைசூருவுக்கு வந்தார். மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தில் வைத்து அவருக்கு மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர், எம்.எல்.ஏ.க்கள் ராமதாஸ், நாகேந்திரா, மூடா தலைவர் ராஜீவ், பிரதாப் சிம்ஹா எம்.பி. உள்பட பலர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதையடுத்து அவர் மைசூரு டவுன் ராமகிருஷ்ணா நகருக்கு சென்று அங்கு புதிதாக கட்டப்பட்டிருந்த பசவ பவனத்தை திறந்து வைத்தார்.
மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த அக்க மகாதேவியின் சிலையையும் திறந்து வைத்தார். அதையடுத்து அவர் மைசூரு டவுனில் அரசு பஸ் போக்குவரத்து கழகம் சார்பில் புதிதாக தொடங்கப்பட உள்ள அம்பாரி பஸ் சேவையின் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இம்முறை கர்நாடக மாநில பட்ஜெட் பெரிய தொகையில் இருக்காது. குறைந்த அளவிலான மதிப்பீட்டிலேயே இருக்கும். அடுத்த மாதம் மாநில பட்ஜெட் அறிவிக்கப்படும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. ஆனால் இந்த முறை பட்ஜெட் தொகை குறைந்த அளவிலேயே இருக்கும். இதற்கு காரணம் மாநிலத்தில், நிதி சேகரிப்பு எதிர்பார்த்தபடி இல்லை. மேலும் வரி மற்றும் நிதி சேகரிப்பு கொரோனா பிரச்சினை, ஊரடங்கு போன்ற காரணங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதன்காரணமாக மாநிலத்தின் பொருளாதாரம் சீர்குலைந்து உள்ளது. அதனால்தான் கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு குறைவான மதிப்பீட்டிலேயே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
சிவமொக்காவில் நடந்த வெடிவிபத்து துரதிர்ஷ்டவசமானது. இந்த வெடிவிபத்தால் அந்த பகுதியில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்து இருக்கின்றன. அதுபற்றி ஆய்வு செய்து சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.
இந்த வெடி விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சுரங்க தொழில், கல்குவாரி தொழில்கள் அவசியம் ஆகும். ஆனால் அவற்றை சட்டவிரோதமாக நடத்தக்கூடாது. அந்த தொழில்களை நடத்த அரசிடம் இருந்து உரிய அனுமதி பெற வேண்டும். இதுவரையில் சட்டவிரோதமாக கல்குவாரிகள் நடத்தி வருபவர்கள் உடனடியாக அரசிடம் விண்ணப்பித்து உரிய அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.
இல்லை என்றால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மைசூருவில் சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கத்தில் அம்பாரி பஸ் சேவையை தொடங்க உள்ளோம். இதற்காக தற்போது சோதனை ஓட்டம் இன்று(நேற்று) நடந்தது. அந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது.
அம்பாரி சொகுசு பஸ்களை விரைவில் அதிக அளவில் மைசூருவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அம்பாரி பஸ்கள் மைசூரு நகரை சுற்றியுள்ள சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லும் பணியை செய்யும். இது சுற்றுலா துறையின் புதிய திட்டம் ஆகும்.
இதுதவிர மைசூருவில் விரைவில் இரண்டடுக்கு பஸ்களையும் இயக்க ஆலோசனை நடத்தி வருகிறோம். அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.