விழுப்புரம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்
விழுப்புரம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் செய்தனா்
சங்க பலகை அகற்றம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரத்தில் புதுச்சேரி மெயின்ரோட்டில் பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடைக்கு எதிரே அம்பேத்கார் உருவ படத்துடன் கூடிய சங்க பலகை ஒன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அந்த கடையின் உரிமையாளர், தனது கடை வியாபாரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி அந்த பலகையை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில், நேற்று முன்தினம் போலீஸ் பாதுகாப்புடன் அந்த பலகை அகற்றப்பட்டது.
சாலை மறியல்
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று காலை அக்கட்சி சார்பில், ராதாபுரம் காலனி பொதுமக்கள் ஒன்று திரண்டு ராதாபுரத்தில் வழுதாவூர்-புதுச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நல்லசிவம், ரவீந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் வெற்றிவேந்தன், கிளை செயலாளர் தனசேகர் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
அதில், ஏற்கனவே அம்பேத்கர் பலகை அகற்றிய இடத்தின் எதிர்திசையில் உள்ள இடத்தில் பலகையை வைக்க தாசில்தார் மூலம் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையேற்று அனைவரும் மறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.