சேலத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மொட்டையடித்து அரை நிர்வாணத்துடன் நிர்வாகி ஒருவர் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொ.மு.ச. மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார். சி.ஐ.டியு. மாவட்ட தலைவர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க கூடாது என்றும் கோஷமிடப்பட்டது.
அரை நிர்வாணத்துடன் பங்கேற்பு
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச. நிர்வாகி ராஜேந்திரன் என்பவர் மொட்டையடித்து கொண்டு அரை நிர்வாணத்துடன் பங்கேற்றார். மேலும் அவர் சோளத்தட்டு பயிரையும் கையில் வைத்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய தொழிற்சங்க கூட்டு இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி வருகிற 26-ந் தேதி சேலம் காந்தி ரோட்டில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலம் நடைபெறும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.