கூலமேட்டில் ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 65 பேர் காயம்

ஆத்தூர் அருகே கூலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் அடங்க மறுத்த காளைகளுடன் காளையர்கள் மல்லுக்கட்டினர். அப்போது, மாடுகள் முட்டியதில் 65 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2021-01-23 22:46 GMT
ஜல்லிக்கட்டு 
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கூலமேடு கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 17-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கனமழை மற்றும் பாதுகாப்பு காரணங்களால் ஜல்லிக்கட்டு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. 
இந்த நிலையில், கூலமேட்டில் நேற்று கோலாகலமாக ஜல்லிக்கட்டு நடந்தது. இதற்காக கூலமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மைதானம் தயார் செய்யப்பட்டிருந்தது. 
சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 640 காளைகள் போட்டியில் பங்கேற்பதற்காக மாட்டின் உரிமையாளர்கள் கொண்டு வந்து பதிவு செய்தனர்.
500 பேர் பதிவு
அந்த மாடுகளுக்கு நோய் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பரிசோதனை செய்தனர். இதேபோல், மாடுபிடி வீரர்களில் 500 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் கீழே விழுந்து காயம் ஏற்படாத வகையில் மைதானத்தில் தென்னைநார் கழிவுகள் பரப்பப்பட்டும், பார்வையாளர்கள் கூட்டத்துக்குள் காளைகள் சென்று விடாமல் இருக்க பாதுகாப்பு தடுப்பு கம்பி வலைகள் கட்டப்பட்டிருந்தன.
கலெக்டர் தொடங்கி வைத்தார் 
இதையடுத்து சரியாக காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் ராமன், போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர், மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், சின்னதம்பி எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதாவது, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கென அறிவுறுத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவேன் எனவும், மாடுகளை துன்புறுத்த மாட்டோம் என்றும் வீரர்கள் உறுதிமொழியை வாசித்தனர். பின்னர், ஜல்லிக்கட்டை கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து வாடிவாசல் வழியாக கோவில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது. அதனை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. பின்னர், மற்ற காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. அப்போது சீறி பாய்ந்து வந்த காளைகளை இளைஞர்கள் அடக்க முயன்றனர். ஆனால் காளைகள் மாடுபிடி வீரர்களின் கையில் சிக்காமல் திமிறிக்கொண்டு ஓடின. 
சில இளைஞர்கள் காளைகளின் திமிலை பிடித்துக்கொண்டு சற்று தூரம் சென்றனர். மேலும், சில காளைகள் துள்ளிக் குதித்தபடி வீரர்களை முட்டி தள்ளி விட்டு ஆக்ரோ‌‌ஷமாக ஓடியதை காணமுடிந்தது. அடங்க மறுத்த காளைகளுடன் வீரர்கள் மல்லுக்கட்டினர்.
திமில் கொண்டு துள்ளி குதித்த சில காளைகளை, அங்கிருந்த மாடுபிடி வீரர்கள் சிலர் மடக்கி பிடித்ததற்காகவும், வீரர்கள் பிடியில் சிக்காமல் ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் சில்வர் பாத்திரங்கள், குக்கர், சைக்கிள், வெள்ளிக்காசு, ரொக்கப்பணம் போன்ற பல்வேறு பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன.
65 பேர் காயம்
இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி தள்ளியதில், தம்மம்பட்டியை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் சவுந்தரபாண்டியன் (வயது 24), லட்சுமணன் (22), சந்தோ‌‌ஷ் (19), அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த காசிராஜா (23), கூடமலை கமல்நாத் (19), சவுந்தர் (18), பிரபு (26) உள்பட 65 பேர் காயம் அடைந்தனர். பின்னர், லேசான காயம் அடைந்தவர்களுக்கு அங்கேயே தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். 
ஆனால் படுகாயம் அடைந்த வீரர்களை மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் மற்றும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஆர்.பி.புதூரை சேர்ந்த தீபன் (19) என்ற வாலிபர், மாட்டின் உரிமையாளருடன் துணைக்கு வந்திருந்தார். அப்போது, வாடிவாசல் வழியாக காளை துள்ளி குதித்தபோது, தான் பிடித்து இருந்த கயிற்றை தீபன் விடாமல் பிடித்து இருந்ததால், மாடு அவரை தரதரவென சுமார் 200 மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றது. இதில், தீபன் படுகாயம் அடைந்தார்.
சிறந்த காளைக்கு பரிசு 
கூலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவை சேலம், ஆத்தூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி, கடம்பூர், நாமக்கல், தர்மபுரி உள்பட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து ரசித்து பார்த்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு மாலை 4.35 மணிக்கு நிறைவடைந்தது. 
முடிவில், மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவனின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்து பரிசு வழங்கப்பட்டது. 
விழாக்குழுவினர் மீது புகார்
கூலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு இதுவரை கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. ஆனால் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க விழாக்குழுவினர் சார்பில் ஒவ்வொரு மாடுபிடி வீரரிடமும் ரூ.300 வசூலிக்கப்பட்டது. இதனால் விழா குழுவினர் மீது மாடுபிடி வீரர்கள் அதிருப்தி அடைந்தனர். 

அதேசமயம் பணம் கொடுத்து டோக்கன் வாங்கிய சிலரை உள்ளே அனுமதிக்கவில்லை எனக்கூறி வெளியூர்களில் இருந்து வந்திருந்த மாடுபிடி வீரர்கள் விழாக்குழுவினரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பின்னர் அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அப்புறப்படுத்தினர். அதேபோல், ஒவ்வொரு காளைக்கும் ரூ.1,000 முதல் ரூ.3,000 வரைக்கும் மாட்டின் உரிமையாளரிடம் வசூலிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜல்லிக்கட்டு என்பது தமிழரின் வீர விளையாட்டாக கருதப்படுகிறது. 
இதனை கண்டுகளிக்க வரும் பார்வையாளர்களிடமும், உயிரை பணயம் வைத்து களத்தில் இறங்கும் மாடுபிடி வீரர்களிடமும் எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது. வரும் ஆண்டுகளில் இதுபோன்ற கட்டுப்பாடுகளை தளர்த்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
ஜல்லிக்கட்டையொட்டி போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்