கடலூர் மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை விற்கக்கூடாது-கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி
கடலூர் மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை விற்கக்கூடாது என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டுள்ளார்.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி மத்திய மற்றும் மாநில அரசால் ஆப்பிரிக்கன் வகை கெளுத்தி மீன்கள் உற்பத்தி செய்வது, வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இம்மீன் இனங்கள், மற்ற மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களை அதி தீவிரமாக இரையாக உண்ணக்கூடியது. மேலும் நமது பாரம்பரிய மீன்கள் மற்றும் வளர்ப்பு மீன்களையும், அவற்றின் முட்டைகளையும் முற்றிலுமாக அழித்துவிடும் தன்மை கொண்டது.
அதனால் நமது நீர்நிலைகளில் உள்ள அனைத்து பாரம்பரிய நீர்வாழ் உயிரினங்களும் அழிந்துவிடும் வாய்ப்பு உள்ளது. மேலும் இவ்வகை மீன் இனங்கள் காற்றில் உள்ள பிராண வாயுவை சுவாசிக்கும் தன்மையும், மிக குறைந்த ஆழமுள்ள நீர்நிலைகளிலும் இனப்பெருக்கம் செய்யும் தன்மையும் கொண்டது. இம்மீன்கள் பாரம்பரிய உள்நாட்டு கெளுத்தி மீன்களுடன் இனப்பெருக்கம் மேற்கொண்டு, அவற்றின் மரபியலை சிதைத்து பல்பெருக்கம் அடையும் வல்லமை உடையது.
நடவடிக்கை
மேலும் அனைத்து நீர்நிலைகளிலும் ஆப்பிரிக்கன் வகை கெளுத்தி மீன்களை தவிர, பிற இன மீன்கள் இல்லாமல் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படக்கூடும். எனவே கடலூர் மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை உற்பத்தி செய்யவும், வளர்க்கவும், விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை உற்பத்தி செய்தாலோ, வளர்த்தாலோ அல்லது விற்பனை செய்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் சம்பந்தப்பட்ட மீன்வளர்ப்பு குளங்கள் அழிக்கப்படுவதுடன், ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களும் அழிக்கப்படும்.
மானியம்
இது தொடர்பான புகார்கள் ஏதேனும் பெறப்பட்டாலோ அல்லது அம்மீன்களை வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது கண்டறியப்பட்டாலோ அவைகளை முற்றிலும் அழித்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்களும் இவ்வகை மீன்களை கொள்முதல் செய்யாமல், அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், மீன்பண்ணைகளில் கட்லா, ரோகு, மிர்கால், சாதாக்கெண்டை, புல்கெண்டை, வெள்ளிகெண்டை மற்றும் கண்ணாடி கெண்டை போன்ற அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள மீன்களை தாராளமாக வளர்க்கலாம். இந்த அனுமதிக்கப்பட்ட மீன்களை வளர்க்க, தமிழக அரசின் மீன்வளத்துறை மானியங்கள் வழங்கி வருகிறது. இதுதொடர்பான விவரங்களை மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகம், கடல்சார் நீர்வாழ் உயிரின பல்கலைக்கழகம் எதிரில் (அண்ணாமலை பல்கலைக்கழகம்) பரங்கிப்பேட்டை என்ற முகவரியில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை கலெக்டா் சந்திரசேகா் சாகமூாி தொிவித்துள்ளாா்.