மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
பட்டிவீரன்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பட்டிவீரன்பட்டி,
பட்டிவீரன்பட்டி அருகே உள்ள நெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மலைச்சாமி (வயது 30). கூலித்தொழிலாளி. இவர் நெல்லூர் பிரிவில் உள்ள தனது உறவினர் வீட்டு விழாவிற்காக ஒலிபெருக்கி மற்றும் மின்விளக்குகள் அமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தார். அப்போது ஒலிபெருக்கியை கட்டுவதற்காக அருகில் இருந்த தென்னை மரத்தின் மீது ஏறி வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தின் அருகில் சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் மலைச்சாமியின் கை பட்டது. அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன மலைச்சாமிக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.