தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்; டிரைவர்கள் உள்பட 6 பேர் காயம் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்; டிரைவர்கள் உள்பட 6 பேர் காயம்;
நல்லம்பள்ளி:
தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து லாரிகள், கார்கள் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சிவகாசிக்கு நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை சிவகாசியை சேர்ந்த டிரைவர் பாலசுந்தரம் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் 2 தொழிலாளர்கள் உடன் வந்தனர்.
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே வந்த போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற வேன் மற்றும் 2 கார்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில், லாரி சாலையில் கவிழ்ந்தது. அப்போது தக்காளி பாரம் ஏற்றிக்கொண்டு பின்னால் வந்த மினி லாரி ஏற்கனவே கவிழ்ந்து கிடக்கும் லாரி மீது மோதியது. கார் தறிகெட்டு ஓடி அங்குள்ள தடுப்பு சுவரில் மோதி நின்றது.
அடுத்தடுத்து நடந்த விபத்து காரணமாக தொப்பூர் கணவாயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து பணியாளர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்த லாரி டிரைவர் பாலசுந்தரம், மினி லாரி டிரைவர் குமார், காரில் வந்த மணிகண்டன் (30) உள்பட 6 பேரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து காரணமாக சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.