கோவையில் 2 நாள் சூறாவளி பிரசாரம்: முதல்-அமைச்சர்எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
2 நாள் சூறாவளி பிரசாரத்துக்காக கோவை வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவை,
தமிழக சட்டமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வர உள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பெயரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டி தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாட்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு கோவை வந்தார்.கோவை விமான நிலையத்தில் அவரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, ஓ.கே.சின்னராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் ,தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கார் மூலம் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரிக்கு சென்று தொழில் முனைவோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையின் போது தொழில் முனைவோர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) கோவையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இன்று காலை 7.05 மணிக்கு கோவை கோனியம்மன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
தொடர்ந்து அவினாசி ரோடு மேம்பாலம், மரக்கடை, வேணுகோபால் ரோடு, ராஜவீதி, செல்வபுரம், குனியமுத்தூர் ஆகிய இடங்களில் மக்கள் மத்தியில் பேசுகிறார். சங்கமம் திருமண மண்டபத்தில் இஸ்லாமியர்களுடன் கலந்துரையாடுகிறார்.
பின்னர்சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட், கிணத்துக்கடவு ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். கிணத்துக்கடவு அருகே உள்ள முருகன் மஹாலில் பிற சமூகத்தினருடன் கலந்துரையாடுகிறார். பொள்ளாச்சி காந்தி சிலை, திருவள்ளுவர் திடல், ஜமீன் ஊத்துக்குளி, ஆனைமலை ரவுண்டானா பகுதியில் பேசுகிறார். மாலையில் என்.எம்.சுங்கம் சந்திப்பு, சுல்தான்பேட்டை, சூலூர் நால்ரோடு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு புலியகுளம் விநாயகர் கோவிலில் பிரசாரத்தை தொடங்குகிறார். அதனை தொடர்ந்து சிங்கா நல்லூர், ரொட்டிகடை மைதானம், காளப்பட்டி, அன்னூர், மேட்டுப்பாளையம், ரங்கநாதர் கோவில், பெரியநாயக்கன் பாளையம், துடியலூர், கவுண்டம்பாளையம் சாய்பாபா கோவில், வடவள்ளி, தொண்டாமுத்தூர், பெரிய குளம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு பேசுகிறார்.