சசிகலா உடல்நலக்குறைவில் அரசியல் நோக்கம்? தஞ்சையில், சீமான் பேட்டி
சசிகலா உடல் நலக்குறைவில் அரசியல் நோக்கம் இருக்கலாம் என தான் கருதுவதாக தஞ்சையில், சீமான் கூறினார்.
தஞ்சாவூர்,
நாம் தமிழர் கட்சி சார்பில் தஞ்சையில் நேற்று நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இது, வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இல்லை. நாங்கள் தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் சென்னையில் பெரிய மாநாடு போல நடத்தி, மொத்த வேட்பாளர்களையும் அறிவிப்போம். அப்போது 117 பெண் வேட்பாளர்கள், 117 ஆண் வேட்பாளர்கள் என 234 தொகுதிக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்வோம்.எங்களது பரப்புரை பயணத்தில் கட்சி உறுப்பினர்களைச் சந்தித்து தேர்தலில் நாம் எப்படி எல்லாம் பணி செய்ய வேண்டும் என அவர்களுடன் பேசினோம். இங்கு ஒருங்கிணைந்த தஞ்சை மண்டலத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வந்துள்ளனர். அவர்களை சந்தித்து ஊக்கப்படுத்துவதற்காக வந்து இருக்கிறேன்.
எங்களிடம் பொருளாதார வலிமை கிடையாது. இப்போதே வாக்காளர்களை அறிவித்தால் தான் முன்பே அவர்கள் மக்களைச் சந்தித்து, மீண்டும் மீண்டும் எங்களது கோரிக்கைகளை வலியுறுத்துவார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதை திரும்ப, திரும்ப பேசி வாக்குகளை சேகரிக்க உள்ளோம்.
நாங்கள் காசு கொடுத்து வாக்கு கேட்பவர்கள் கிடையாது. சிறந்த ஆட்சியை கொடுப்போம் என்று விளக்கி கூறி, மக்களிடம் வாக்குகளைப் பெறுவோம். அதனால் முன்கூட்டியே இந்த பயணத்தை தொடங்கி உள்ளோம்.
ஏற்கனவே 840 மீனவர்களை இலங்கை கடற்படை கொன்று குவித்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மீனவர் கூட சுடப்படவில்லை எனவும், கொல்லப்படவில்லை எனவும் பா.ஜ.க.வினர் கூறி வந்தனர். தற்போது 4 மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு என்ன சொல்ல போகிறார்கள்?. இதை வெளியுறவுத் துறை, ராணுவத்துறை கண்டித்து இந்த செயல் நடக்கக் கூடாது என கூறவில்லை. நட்பு நாடு என சொல்லக்கூடிய சின்ன நாடான இலங்கை, எத்தனை தமிழக மீனவர்களை கொன்று குவித்துள்ளது.
இதுவே, வட இந்திய மீனவர்களுக்கு நிகழ்ந்திருந்தால் இதுபோல மத்திய அரசு விடுமா? ஆனால், தமிழன் உயிர் என்றால் சாதாரணமாக பார்க்கப்படுகிறது. எங்களிடம் ஆட்சி அதிகாரம் இருந்திருந்தால் இலங்கை ராணுவம் மீனவர்களை தொடுமா?. கேரள மீனவர்கள் 2 பேரை இத்தாலி ராணுவ வீரர்கள் சுட்டு கொன்றபோது உடனடியாக கைது செய்த கேரள அரசு, ரூ.2 கோடி அபராதம் விதித்து பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி வழங்கியது. இத்தாலி ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது. அதுபோன்ற அரசியல் சூழல் தமிழகத்தில் இல்லை.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களால் விவசாயிகள் மட்டும் பாதிக்கப்பட போவதில்லை. ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்படுவார்கள். இது விவசாயிகள் பிரச்சினை மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பிரச்சினையாகும். 130 கோடி மக்களுக்கான ஆபத்தான திட்டங்களாகும். அரசு தான் குடிமக்களை பாதுகாக்க வேண்டும்.
சசிகலா நலம் பெற்று வெளியே வர வேண்டும் என வாழ்த்துகிறேன். கடந்த 4 ஆண்டுகளில் சசிகலா ஒரு முறை கூட மருத்துவமனைக்கு செல்லவில்லை. அடுத்த 4 நாள்களில் சிறையில் இருந்து வெளியே வரும் நிலையில், திடீரென அவருக்கு இப்போது கொரோனா, நிமோனியா காய்ச்சல் என கூறப்படுவதால், அது என்ன காரணம் என வேறு மாதிரியாக யோசிக்க வைக்கிறது. எனவே, இதில், அரசியல் நோக்கம் இருக்கலாம் என நான் கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.