வேலைவாய்ப்பை அதிகரிக்க வாலிநோக்கத்தில் 3 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தொடங்கப்படும் - தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. உறுதி
வேலைவாய்ப்பை அதிகரிக்க வாலிநோக்கத்தில் 3 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தொடங்கப்படும் என கனிமொழி எம்.பி. கூறினார்.
முதுகுளத்தூர்,
சாயல்குடி ஒன்றியம் கன்னிராஜபுரம் உறைக்கிணறு வி.வி.ஆர்.நகரில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. அங்கு பொதுமக்களிடம் கனிமொழி எம்.பி. கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
நரிப்பையூர் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார். அதன்மூலம் கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் ஒன்றியங்கள் உள்ள 365 கிராமங்கள் பயன் அடைந்து வந்தன. ஆனால் தற்போது அத்திட்டம் பராமரிப்பு இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அதனை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
வாலிநோக்கம் உப்பு நிறுவனம் 1972-ல் இப்பகுதி மக்களின் வேலைவாய்ப்புக்காக கொண்டு வரப்பட்டது. 5000 ஏக்கர் பரப்பளவுள்ள உப்பு நிறுவனத்தில் 2000 ஏக்கர் மட்டுமே பயன்பாட்டில் வேலைவாய்ப்பை தந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மீதமுள்ள 3 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். பனைத்தொழில் செய்யும் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் கருப்பட்டியை நியாயவிலை கடை மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பனைத் தொழிலாளர்களுக்கு பனை வாரியம் மூலம் கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை போல் பனைத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, சுபதங்கவேலன், ஒன்றிய செயலாளர்கள் கடலாடி ஆப்பனூர் ஆறுமுக வேல், சாயல்குடி ஜெயபாலன் கமுதி ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி போஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல், சாயல்குடி பேரூர் செயலாளர் வெங்கடேஷ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சத்தியேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முதுகுளத்தூரில் கனிமொழி எம்.பி. தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது மகளிர் சுய உதவிக்குழுக்கான மானியம் சரியாக கிடைக்கவில்லை. படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை. பெண்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. விவசாயிகளை, தொழிலாளர்களை, வியாபாரிகளை, பெண்களை வஞ்சிகின்ற இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென பேசினார். முன்னதாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மாவீரர் சுந்தரலிங்கம், கோவில்பட்டி தியாகி கோபாலகிருஷ்ணன் யாதவ் ஆகியோரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், நவாஸ்கனி எம்.பி., முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பவானி ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், சத்தியமூர்த்தி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர்கள் கிழக்கு பூபதி மணி, மேற்கு சண்முகம், நகர செயலாளர் ஷாஜகான், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் சீனி முகம்மது, முன்னாள் ஒன்றிய செயலாளர் முனியசாமி, மாணவரணி முத்துராமலிங்கம், தொண்டரணி அமைப்பாளர் அழகர், வழக்கறிஞர் ஆறுமுகம் பால் பண்ணை சேர்வாரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.