பாம்பனில் ஆழ்கடல் மீன்பிடி திட்டம் மீன்வளத்துறை மந்திரி இன்று தொடங்கி வைக்கிறார்

பாம்பனில் ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தை மீன்வளத்துறை மந்திரி இன்று தொடங்கி வைக்கிறார்.

Update: 2021-01-23 14:52 GMT
ராமேசுவரம்,

மத்திய மீன்வளத்துறை மந்திரி கிரிராஜ்சிங் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு ராமேசுவரம் வருகை தந்தார். இன்று(சனிக்கிழமை) காலை மீன்வளத்துறை மந்திரி கிரிராஜ்சிங் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய உள்ளார்.

இதைதொடர்ந்து காலை 9.15 மணி அளவில் பாம்பன் குந்துகால் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 புதிய ஆழ்கடல் மீன்பிடி படகுகளை மீன் பிடிப்பதற்கான திட்டத்தை தொடங்கி வைத்து ேபசுகிறார். பின்னர் அந்த புதிய படகிலும் சிறிது தூரம் கடலுக்குள் சென்று வர உள்ளார்.

இதைதொடர்ந்து மண்டபம் செல்லும் மத்திய மீன்வளத்துறை மந்திரி அங்கு கடல்பாசி வளர்ப்பு குறித்து ஆய்வு நடத்த உள்ளார். மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் பனைக்குளம் அருகே உள்ள ஆற்றங்கரையில் உள்ள தனியார் இறால்பண்ணை வளர்ப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றார். மீண்டும் இரவு ராமேசுவரத்தில் தங்கும் அவர் நாளை காலை ராமேசுவரம் கோவிலில் ஸ்படிக லிங்கம் தரிசனம் செய்துவிட்டு கார் மூலமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புறப்பட்டு செல்கிறார்.

மத்திய மந்திரி வருவதையொட்டி குந்துகால் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகத்தில் விழா மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணியானது நேற்று முதல் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

மேலும் செய்திகள்