திருவண்ணாமலையில் வெளிநாட்டு வகை மதுக்கடை திறப்பதை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலையில் வெளிநாட்டு வகை மது விற்கும் எலைட் டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-01-23 09:49 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை காந்திநகர் வேட்டவலம் ரோடு சந்திப்பு பகுதியில் எலைட் டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை கடை திறப்பதற்காக பூஜை போடப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு வெளிநாட்டு வகை மதுபானங்கள் விற்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து தகவலறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகள் வேட்டவலம் ரோடு சந்திப்பு பகுதியில் திரண்டு எலைட் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூறுகையில், இங்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் வருகிறார்கள். அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு செல்பவர்களுக்கு இது முக்கிய பாதையாகும். மருத்துவமனைக்கும் இந்த வழியாகத்தான் பொதுமக்கள் சென்று வருகிறார்கள்.

அதனால் இங்கு டாஸ்மாக் கடை திறந்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். எனவே இந்த இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என்றும், டாஸ்மாக் அதிகாரி நேரில் வந்து கடை திறக்ககூடாது என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கூறினர்.

பின்னர் அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பழனி ஆகியோர் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இந்த இடத்தில் எலைட் டாஸ்மாக் கடை திறக்கப்படாது என்று உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்