சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம் 28-ந்தேதி தேரோட்டம்

காங்கேயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச தேர்த் திருவிழாவை முன்னிட்டு, நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. 28-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

Update: 2021-01-22 23:45 GMT
சிவன்மலை
காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்கு நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற முருகப் பெருமான் குடிகொண்ட கோவில்களில் தலையாயது ஆகும். இந்த கோவிலில் முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி இருப்பது மிகவும் சிறப்பாகும். சிவன்மலை முருகப்பெருமனை மனமுவந்து வணங்கினால், அவருடைய பாதம் கனவிலும் வந்து காக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். 

அதன்படி சுப்பிரமணியசாமி கோவிலின் தைப்பூச தேர்த்திருவிழா, 2 நாட்களுக்கு முன்பு மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 

கொடியேற்றம்
இந்த நிலையில், சிவன்மலை சுப்பிரமணியசாமி மலைக்கோவிலில் நேற்று காலை 11 மணியளவில் விநாயகர் வழிபாடு நடைபெற்றது. பின்னர் கோவில் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் பகல் 12 மணியளவில் தைப்பூச தேர்த் திருவிழா கொடி ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிவன்மலை முருகன் கோவிலின் உதவி ஆணையர் ஜெ.முல்லை மற்றும் கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர். கொரோனா தொற்றின் காரணமாக ஏற்கனவே அறிவித்திருந்தபடி, கட்டளைதாரர்கள் மற்றும் பக்தர்கள் இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் அனுமதிக்கப்படவில்லை. தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 28-ந் தேதி ஒருநாள் மட்டும் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்