கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு

கொரோனா பரவல் தடுப்புக்காக அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கலெக்டர் கார்த்திகா திடீர் ஆய்வு நடத்தினார்.

Update: 2021-01-22 23:28 GMT
திடீர் ஆய்வு
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த 19-ந்தேதி முதல் திறக்கப்பட்டன. முதல் கட்டமாக 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகளில் பாடம் நடத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி உரிய விதிகளை பின்பற்றி பள்ளிகளில் மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், நேற்று தர்மபுரி இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் கார்த்திகா திடீர் ஆய்வு நடத்தினார். வகுப்பறைகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா? என அப்போது பார்வையிட்டார்.
சமூக இடைவெளி
தினமும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே மாணவ-மாணவிகள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படவேண்டும். வகுப்பறைகளில் சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும். அனைவரும் முக கவசங்கள் அணியவேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் கிருமிநாசினியை பயன்படுத்தவேண்டும் என்று அப்போது ஆசிரிய, ஆசிரியைகளிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.

பள்ளிகளில் விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக மாணவ-மாணவிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணி மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்