வீரகனூரில் முடிதிருத்தும் தொழிலாளி தற்கொலை
வீரகனூரில் முடிதிருத்தும் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர்கள் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;
முடிதிருத்தும் தொழிலாளி
தலைவாசல் அருகே வீரகனூர் பழைய சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 55). முடிதிருத்தும் தொழிலாளி. இவருக்கு மனோகரன், கார்த்திக், வீரமணி ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் பெரியசாமி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பெரியசாமிக்கு சொந்தமான நிலத்தை அடமானமாக பெற்றுக் கொண்டவர்கள், அதை திருப்பி தரவில்லை. இதனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெரியசாமியின் மனைவி மாதேஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வழக்குப்பதிவு
இந்த நிலையில் பெரியசாமியியும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எனவே நிலத்தை அபகரித்த அதே பகுதியை சேர்ந்த ஆசிரியர் சங்கர், அவரது மனைவி ஆசிரியை தமிழ்ச்செல்வி மற்றும் நவீன் ஆகியோர் மீது வீரகனூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
அதன் பேரில் வீரகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் தமிழ்ச்செல்வி, சங்கர், நவீன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.