தொழிலதிபா் வீட்டில் ரூ.9 லட்சம் நகை கொள்ளை
செஞ்சி அருகே தொழிலதிபா் வீட்டில் ரூ 9 லட்சம் நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனா்.
விக்கிரவாண்டி
செஞ்சி அருகே தொழிலதிபர் வீட்டின் கதவு அடிப்பகுதியை வெட்டி எடுத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் ரூ. 9 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா அணிலாடி கிராமத்தை சேர்ந்தவர் தேவசகாயம் (வயது 60). இவரது மகன் ஜான்சன் (28). மும்பையில் வீடுகளுக்கு ஜன்னல், கதவு, கேட் ( என்ஜினீயரிங் ஒர்க் ஷாப்) புதிதாக செய்து கொடுக்கும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.
இவருக்கு உதவியாக இருக்கும் வகையில், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி தேவசகாயம் தனது மனைவி கணிக்கைமேரி(56)யுடன் மும்பைக்கு சென்றுவிட்டார்.
நேற்று முன்தினம் அணிலாடியில் உள்ள ஜான்சனின் வீட்டு கதவு பூட்டிய நிலையில் அடிப்பகுதி மட்டும் வெட்டி எடுக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர் வனத்தையன் என்பவர் ஜான்சனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
தொடர்ந்து அவரது குடும்பத்தினர் விமானம் மூலமாக சொந்த ஊருக்கு விரைந்தனர். வீட்டுக்கு வந்து பார்த்த போது அங்கிருந்த பீரோவை கள்ளச்சாவியை பயன்படுத்தி திறந்து உள்ளனர்.
பின்னர் பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 500 கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் 2 கிலோ வெள்ளி பொருட்கள், 30 கிலோ பித்தளை விளக்குகளும் கொள்ளை போயிருந்தது.
இதுபற்றி தேவ சகாயம் பெரியதச்சூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
வீடு நீண்ட நாட்களாக பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட மர்மமனிதர்கள், கதவு பூட்டை உடைத்து உள்ளே நுழையாமல், கதவின் அடிப்பகுதியை மட்டும் மரம் அறுக்கும் எந்திரத்தால் வெட்டி எடுத்து உள்ளே நுழைந்து சென்று இருக்கிறார்கள். பின்னர் கள்ளச்சாவியை பயன்படுத்தி பீரோவை திறந்து நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
கொள்ளைபோன நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.9 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
வருகிற 27-ந்தேதி ஜான்சனுக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் அவரது வீட்டில் கொள்ளை நடந்து உள்ளது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.