இந்தியா முழுவதும் ஒரே மொழி கொள்கையை மத்திய அரசு திணிப்பதன் மூலம் தமிழை அழிக்க முயற்சி செய்கிறார்கள் - அருணை தமிழ்ச்சங்க விழாவில் ஆ.ராசா எம்.பி. பேச்சு

இந்தியா முழுவதும் ஒரே மொழி கொள்கையை மத்திய அரசு திணிப்பதன் மூலம் தமிழை அழிக்க முயற்சி செய்கிறார்கள் என்று ஆ.ராசா எம்.பி. கூறினார்.

Update: 2021-01-22 10:52 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் சாலையில் உள்ள அருணகிரிநாதர் அரங்கத்தில் அருணை தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழர் திருநாள் விழா நடைபெற்றது.

விழாவையொட்டி மங்கல இசை, பரதநாட்டியம், மகளிர்கள் மட்டுமே பங்குபெற்ற கட்டக்கூத்து குழுவினரின் தெருக்கூத்து, சங்க இலக்கியத்தில் அதிகம் பேசப்படுவது காதலா? வீரமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம், ராஜலட்சுமி செந்தில் கணேஷ் குழுவினரின் நாட்டுப்புற ஆடல், பாடல், பல்சுவை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.

அருணை தமிழ்ச்சங்க தலைவரும், எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு தலைமை தாங்கி பேசினார். எம்.எல்.ஏ.க்கள் கு.பிச்சாண்டி, மு.பெ.கிரி, கே.வி.சேகரன், எஸ்.அம்பேத்குமார் மற்றும் எம்.எஸ்.தரணிவேந்தன், முன்னாள் எம்.பி. த.வேணுகோபால், சி.என்.அண்ணாதுரை எம்.பி., முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், டாக்டர் எ.வ.வே.கம்பன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பார்வதிசீனுவாசன், வெற்றித்தமிழர் பேரவை தலைவர் ப.கார்த்திவேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அருணை தமிழ்ச்சங்க துணைத்தலைவர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன் வரவேற்றார்.

விழாவில் உவமைக் கவிஞர் சுரதாவின் உருவப்படத்தை கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

விருது பெற்றவர்களின் தகவுரையை செயலாளர் வே.ஆல்பர்ட், டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., இரா.ஸ்ரீதரன் ஆகியோர் வாசித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யுமான ஆ.ராசா கலந்துகொண்டு, எ.வ.வேலு எம்.எல்.ஏ. தலைமையில் தமிழ் தொண்டு ஆற்றி வருபவர்களுக்கான மறைமலை அடிகளார் விருதை திருவண்ணாமலையை சேர்ந்த பாவரசு மு.கண்ணனும், பொது தொண்டு ஆற்றி வருபவர்களுக்கான டாக்டர் முத்துலட்சுமி விருதை திருவண்ணாமலையை சேர்ந்த ரா.கண்ணகிக்கும், கலை தொண்டு ஆற்றி வருபவர்களுக்கான கலைவானர் என்.எஸ்.கே. விருதை சேத்துப்பட்டு தாலுகாவை சேர்ந்த நாடக ஆசிரியர் ஆ.பாலகிருஷ்ணனுக்கும், ஆன்மிக தொண்டாற்றி வருபவர்களுக்கான கிருபானந்த வாரியார் விருதை செங்கம் தாலுகாவை சேர்ந்த வெ.கிருஷ்ணமூர்த்திக்கும் வழங்கி, அவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மற்றும் பொற்கிழி வழங்கினார்.

விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரில் நடைபெற்ற கோலப்போட்டியில் வெற்றிப்பெற்ற மகளிர்களுக்கு பரிசுகள் வழங்கி ஆ.ராசா எம்.பி. பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

அருணை தமிழ்ச்சங்கம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புலவர்களையும், தெருக்கூத்துக் கலைஞர்களையும், சமூக ஆர்வலர்களையும், ஆன்மிகத் தொண்டு புரிபவர்களையும் அழைத்து கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் இதன் மூலம் தமிழ் உணர்வையும், தமிழையும் வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இந்தியா முழுவதும் ஒரே மொழிக் கொள்கையை மத்திய அரசாங்கம் திணிப்பதன் மூலம் தமிழை அழிக்க முயற்சி செய்கிறார்கள். இப்படிப்பட்ட காலக்கட்டத்தில் தமிழை காக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அருணை தமிழ்ச் சங்கம் திருவண்ணாமலையில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக எம்.எல்.ஏ.க்கள் பனமரத்துபட்டி ராஜேந்திரன், வசந்தம் கார்த்திகேயன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.சிவானந்தம், எஸ்.கே.பி.கல்லூரி தலைவர் கு.கருணாநிதி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பாரதிராமஜெயம், ஒன்றியக்குழு தலைவர்கள் சி.சுந்தரபாண்டியன், கலைவாணி, ஓ.ஜோதி, அய்யாக்கண்ணு, அன்பரசி ராஜசேகரன், சாந்திபெருமாள், காமாட்சி, கமலாட்சி, கனிமொழிசுந்தர் உள்பட மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தொழில் அதிபர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஏற்பாடுகளை அருணை தமிழ்ச்சங்க துணைத்தலைவர் கவிஞர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், செயலாளர் வே.ஆல்பிரட், பொருளாளர் ஹாஜி.எம்.இ.ஜமாலுதீன், இணைச் செயலாளர் எ.வ.குமரன் ஆகியோர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்