சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்; அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 18-ந்தேதி முதல் 32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது.;
இதையொட்டி ஒவ்வொரு நாளும் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம், திண்டுக்கல் பஸ்நிலையம் முன்பு தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி முன்னிலை வகித்தார்.
விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு, கொடியசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் வரவேற்றார். இந்த ஊர்வலத்தில் போலீசார், இளைஞர்கள் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனங்களில் சென்றனர். அப்போது இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும், கார்களில் செல்வோர் சீல்பெல்ட் அணிய வேண்டும், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்பட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.
இந்த ஊர்வலம் ஏ.எம்.சி.சாலை, மெயின்ரோடு, திருச்சி சாலை உள்பட முக்கிய சாலைகள் வழியாக சென்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.