கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை; வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது

கொடைக்கானலில் வருகிற 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சப்- கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.

Update: 2021-01-22 04:47 GMT
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டம் சப்-கலெக்டர் தலைமையில் நடைபெற்றபோத
பிளாஸ்டிக் பயன்பாடு
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மலைப்பகுதியில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என கடந்த 2019-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பேரில் கடந்த 2020- ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு கொடைக்கானல் நகராட்சி சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது.

கருத்து கேட்பு கூட்டம்
இந்தநிலையில் பிளாஸ்டிக் பயன்பாட்ைட தடுப்பது குறித்து பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சப்- கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் நாராயணன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் சரவணகுமார், சுகாதார ஆய்வாளர் சுப்பையா மற்றும் கொடைக்கானலில் உள்ள ஓட்டல் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், மொத்த விற்பனையாளர்கள், வர்த்தகர் சங்க நிர்வாகிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், பொது நலச்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

21 பொருட்களுக்கு தடை
இதில் கொடைக்கானலில் வருகிற 1-ந்தேதி முதல் பாலித்தீன் கவர்கள், கையுறைகள், குடிநீர்பாட்டில்கள், குளிர்பானபாட்டில்கள், டம்ளர்கள், தட்டுகள் உள்பட 21 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு வர்த்தக சங்க பிரதிநிதிகள், மொத்த வியாபாரிகள், பொது நலச்சங்கத்தினர் ஆட்சேபம் தெரிவித்தனர். மேலும் இதை அமல்படுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும். பெரும்பாலான உணவு பொருட்கள் பாலித்தீன் பைகளால் பேக்கிங் செய்யப்படுகிறது. இதை உடனடியாக நிறுத்த இயலாது.

குடிநீர் தேவைகளுக்காக நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தானியங்கி எந்திரங்கள் அமைக்கப்படும் வரை குடிநீர் பாட்டில்களை பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். அப்போது ஏற்கனவே கூடுதலாக அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது எனவும், இனி கால அவகாசம் அளிக்கப்பட மாட்டாது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பறிமுதல்
இதுகுறித்து சப்- கலெக்டர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:-
கொடைக்கானல் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. வருகிற 1-ந்தேதி முதல் கொடைக்கானலுக்கு கொண்டு வரப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனைச்சாவடியில் பறிமுதல் செய்யப்படும்.

வருகிற 8-ந்தேதி முதல் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படும். குடிநீர் தேவைக்காக நகரின் பல்வேறு இடங்களிலும், சுற்றுலா இடங்களிலும் தானியங்கி எந்திரம் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பதற்காக கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்