அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-01-22 01:52 GMT
திருச்சி, ஜன.22-
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும். முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு ரூ.1 லட்சம், உதவியாளருக்கு ரூ.50 ஆயிரம் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் அகிலாண்டேஸ்வரி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் சிறப்புரையாற்றினார். இதில் சங்க நிர்வாகிகள் கலைவாணி, கஸ்தூரி, திலகம், ரஹமத்பானு, அலமேலு உள்பட அங்கன்வாடி ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் கலைச்செல்வி தலைமையிலும், புள்ளம்பாடி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன் வட்டார தலைவர் நல்லம்மாள் தலைமையிலும், காட்டூரில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன் சங்கத்தின் திருவெறும்பூர் ஒன்றிய தலைவி லீலாவதி தலைமையிலும் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்