பெத்தநாயக்கன்பாளையம் அருகே பிளஸ்-2 மாணவிக்கு கொரோனா
பெத்தநாயக்கன்பாளையம் அருகே பிளஸ்-2 மாணவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அந்த மாணவி படித்த பள்ளிக்கூடம், தங்கி இருந்த விடுதி ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டன.
பெத்தநாயக்கன்பாளையம்:
பெத்தநாயக்கன்பாளையம் அருகே பிளஸ்-2 மாணவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அந்த மாணவி படித்த பள்ளிக்கூடம், தங்கி இருந்த விடுதி ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டன.
அரசு பள்ளி மாணவிக்கு தொற்று
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள பெரிய கிருஷ்ணாபுரத்தில் அரசு மாதிரி பள்ளி இயங்கி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு இருந்தன. தற்போது 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு கடந்த 19-ந் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பெரியகிருஷ்ணாபுரம் அரசு மாதிரி பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கருமந்துறை பகுதியை சேர்ந்த அந்த மாணவிக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தன. இதைத்தொடர்ந்து தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நேற்று மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
ஆஸ்பத்திரியில் அனுமதி
இதைத்தொடர்ந்து நேற்று மருத்துவ குழுவினர், மாணவி படிக்கும் பெரிய கிருஷ்ணாபுரம் அரசு மாதிரி பள்ளிக்கு சென்று அந்த மாணவியை 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து ெசன்றனர். அங்கு அந்த மாணவி கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் அந்த மாணவி தங்கி இருந்த விடுதியில் உடனிருந்த 36 மாணவிகளுக்கும், பள்ளியில் பணியாற்றி வரும் 7 ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து மற்ற மாணவிகளின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களுடைய பொறுப்பில் மாணவிகள் அனுப்பப்பட்டுள்ளனர்.
விடுதி மூடப்பட்டது
மாணவி பயின்ற மாதிரி பள்ளி மற்றும் அவர் தங்கியிருந்த விடுதி, பெரியகிருஷ்ணாபுரம் உயர்நிலைப்பள்ளி விடுதி என 2 விடுதிகளும் தற்காலிகமாக மூடப்படுவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிக்கூடம் திறந்த 3 நாட்களில் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.