சேலத்தில் பெண் போலீசார் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்

சேலத்தில் சாலை பாதுகாப்பு விழாவையொட்டி பெண் போலீசார் பங்கேற்ற ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

Update: 2021-01-22 01:51 GMT
சேலம்:
சேலத்தில் சாலை பாதுகாப்பு விழாவையொட்டி பெண் போலீசார் பங்கேற்ற ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
ஹெல்மெட் ஊர்வலம்
சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி சேலத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மாநகர போலீசார் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று அம்மாபேட்டை நஞ்சம்பட்டி பிரிவு ரோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். இதையடுத்து ஊர்வலம் அம்மாபேட்டை மண்டல அலுவலகம், கடை வீதி, திருச்சி மெயின் ரோடு வழியாக லைன்மேட்டில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தை வந்தடைந்தது. இதில் பெண் போலீசார் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மொபட் உள்பட இரு சக்கர வாகனங் களை ஓட்டி வந்தனர்.
உயிரிழப்புகள் அதிகம்
அதைத்தொடர்ந்து ஆயுதப்படை மைதானத்தில் சாலை பாதுகாப்பு குறித்த குறும்படம் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தலைமை தாங்கி குறும்படத்தை வெளியீட்டு பேசியதாவது:- 
சாலை பாதுகாப்பு வார விழாவானது மாத விழாவாக இந்த ஆண்டு மாறி உள்ளது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் முழுவதுமே பாதுகாப்பு ஆண்டு தான். சாலை விதிகளை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும்.
குறிப்பாக வாகன ஓட்டிகள் அனைவரும் சிக்னல் விதிகளை மதிக்க வேண்டும். மற்ற இறப்புகளை விட சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளே நாட்டில் மிக அதிகம். அதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறோம். உலகத்திலேயே மணமானது மனிதனின் உடல் தான். உடலில் இருந்து உயிர் பிரிந்தால் பிணமாகி விடுகிறோம். அதில் இருந்து நாற்றம் தான் ஏற்படுகிறது. எனவே நம் உடலை நன்றாக கவனித்து கொள்ள வேண்டும். சாலை விதிகள் குறித்து நாம் பிறருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி விபத்தில்லாத ஆண்டாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். 
இந்த விழாவில் துணை கமிஷனர்கள் செந்தில், சந்திரசேகரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்