சட்டமன்ற தேர்தல் குறித்து சிந்திக்கவே இல்லை - பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி

இட ஒதுக்கீடு போராட்டம் தான் முக்கியம். சட்டமன்ற தேர்தல் குறித்து சிந்திக்கவே இல்லை என்று தர்மபுரியில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

Update: 2021-01-22 00:39 GMT
தர்மபுரி,

தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்கள் பாடி செல்வம், சாந்தமூர்த்தி, மாவட்ட தலைவர்கள் இமயவர்மன், செல்வகுமார், மாநில இளைஞர் சங்க செயலாளர்கள் செந்தில், முருகசாமி, மாநில வன்னியர் சங்க செயலாளர் அரசாங்கம், மாவட்ட செயலாளர்கள் பாலகிருஷ்ணன், நாகராஜன், மாவட்ட தலைவர் பாலாஜி மாநில துணைத்தலைவர் வாசு நாயுடு, தொகுதி அமைப்பு தலைவர் டி.ஜி.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் சத்தியமூர்த்தி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி வருகிற 29-ஆம் தேதி நடைபெறும் பெருந்திரல் போராட்டம் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் முன்னாள் எம்.பி.க்கள் டாக்டர் செந்தில், பாரி மோகன், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி, பசுமை தாயக மாநில துணை செயலாளர் மாது, ஒன்றிய குழு தலைவர்கள் கவிதா ராமகிருஷ்ணன், மகேஸ்வரி பெரியசாமி, மாவட்ட கவுன்சிலர்கள் சரவணன், சி.வி.மாது, இளைஞர் சங்க மாநில துணை செயலாளர் அன்பழகன், மாணவர் சங்க மாநில செயலாளர் முரளி, மாநில துணை செயலாளர் செந்தில்குமார், தொகுதி அமைப்பு செயலாளர் சுப்ரமணியன், நகர செயலாளர்கள் சத்தியமூர்த்தி, வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிழக்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி நன்றி கூறினார்.

கூட்டத்திற்குப் பின் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வருகிற 29-ந்தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பெருந்திரல் போராட்டம் நடைபெறும். பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு போராட்டத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ளது. இட ஒதுக்கீடு போராட்டம் தான் முக்கியம். சட்டமன்ற தேர்தலை பற்றி சிந்திக்கவே இல்லை. சட்டமன்ற தேர்தல் குறித்த டாக்டர் ராமதாஸ் தான் முடிவு எடுப்பார் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்