கந்தர்வகோட்டை அருகே போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை; பணிச்சுமை காரணமா? போலீசார் விசாரணை
கந்தர்வகோட்டை அருகே போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரிக்கின்றனர்.;
சிறப்பு காவல்படை
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே மஞ்சப்பேட்டை பகுதியை சேர்ந்த மாரிமுத்துவின் மகன் ஆகாஷ் (வயது 20). இவர் கடந்த 2020-ம் ஆண்டில் போலீஸ் வேலையில் சேர்ந்தார். திருச்சி முதலாம் அணி சிறப்பு காவல்படையில் பயிற்சி முடித்தார். கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி முதல் ராஜபாளையத்தில் 11-வது பட்டாலியனில் (சிறப்பு காவல் படை) போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். ராமேசுவரத்தில் உள்ள மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் பணியில் இருந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு ஆகாஷ் வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு ஆகாஷ் தற்கொலை செய்து கொண்டார். அவர் தூக்கில் தொங்கியதை நேற்று காலை அவரது உறவினர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பணிச்சுமை காரணமா?
போலீசாரின் விசாரணையில் ஆகாசுக்கு திருமணமாகவில்லை என தெரிந்தது. காவல்துறை பணியில் அவர் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். சிலரது கட்டாயத்தினால் அவர் பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே பயிற்சியில் இருந்தபோது யாருக்கும் தெரியாமல் வீ்ட்டிற்கு ஓடி வந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆகாஷ் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். பணிச்சுமை காரணமா? அல்லது உயர்அதிகாரிகளின் தொல்லையா?, மன உளைச்சல் காரணமா? பணியில் விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்தாரா அல்லது வேறு எதுவும் காரணமா என்பன உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர். பயிற்சி முடிந்து சில நாட்களிலேயே போலீஸ்காரர் தற்கொலை செய்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.